தடுப்பூசி மையங்களில் நடக்கும் பித்தலாட்டம்! மைய ஊழியர்களுக்கு NHS எச்சரிக்கை!

Report Print Ragavan Ragavan in பிரித்தானியா
0Shares

பிரித்தானியாவில் உள்ள சில கொரோனா தடுப்பூசி மையங்களில் நாள் முடிவில் மீதமாகும் தடுப்பு மருந்துகளை அங்கு பணிபுரிபவர்கள் தங்கள் உறவினர்களுக்கு கொடுத்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் ஃபைசர், மாடர்னா மற்றும் ஆக்ஸ்போர்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகளை அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக பிப்ரவரி இறுதிக்குள் 15 மில்லியன் குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்திவிட திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக நாடுமுழுவதும் பல பகுதிகளில் 17 வெகுஜன தடுப்பூசி மையங்கள், நூற்றுக்கணக்கான பொது மருத்துவர் தலைமையிலான முகாம்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மருத்துவமனைகலில் தடுப்பூசிகளை வழங்கிவருகிறது.

அதிலும் முதலில் 70 மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் முன்னிலை சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி மையங்களில் உள்ள ஊழியர்கள் நாள் முடிவில் மீதமுள்ள டோஸ்கள் வீணாகப் போவதைத் தடுக்க, தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு செலுத்துவதாக தெரியவந்துள்ளது.

கென்ட், எசெக்ஸ், பக்கிங்ஹாம்ஷைர் மற்றும் தெற்கு லண்டனின் சில பகுதிகளில் இந்த குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. 30 மற்றும் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள அழைப்பு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு தடுப்பூசிகளை பெறும் நபர்கள் முன்னுரிமை குழுவில் இல்லாவிட்டால், இதைச் செய்யும் தடுப்பூசி மைய ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக சுகாதார சேவை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அதாவது, முதற்கட்டமாக செலுத்த திட்டமிடப்பட்டுள்ள பட்டியலில் உள்ளவர்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமல் தடுப்பூசி வழங்கினால் பிரச்சினை இல்லை.

அதைத் தவிர்த்து, 70 வயதுக்கு குறைவானவர்கள் அல்லது வேறு யாருக்காவது முறையின்றி தடுப்பூசி வழங்கப்பட்டால் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்