பாசத்தால் வீழ்த்தும் மேஷ ராசியினரே: குருபெயர்ச்சி பலன்கள்

Report Print Fathima Fathima in ஜோதிடம்
0Shares
0Shares
lankasrimarket.com

நெற்றிக் கண்ணையே திறந்தாலும் நிமிர்ந்து நின்று நினைத்ததை சொல்லிவிடும் ஆற்றலுடைய நீங்கள், உச்சிமீது வான் இடிந்து விழுந்தாலும் அஞ்ச மாட்டீர்கள்.

நல்லது, கெட்டதை ஆராய்ந்து, மற்றவர்கள் நலனுக்காக பாடுபடுபவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு சகட வீடான 6ம் இடத்தில் மறைந்துக் கொண்டு ஒரு பிரச்னை முடிந்துவிட்டது என்று நிம்மதி பெருமூச்சு விட்ட போது, மற்றொரு சிக்கலில் சிக்கிக் கொண்டு விழிப்பிதுங்கி நின்றீர்களே!

எதையும் வார்த்தைகளால் சொல்ல முடியாதபடி உள்ளுக்குள்ளேயே அழுது புலம்பி தவித்தீர்களே! உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் கூட உங்களை மூன்றாவது மனுஷனாக பார்க்க வைத்தாரே!

அப்படிப்பட்ட குருபகவான் இப்போது 02.09.2017 முதல் 02.10.2018 வரை உங்களது ராசிக்கு 7ல் அமர்ந்து உங்களை நேருக்கு நேர் பார்க்கயிருப்பதால் சோகக்கடலில் மூழ்கியிருந்த உங்கள் முகத்தில் இனி புன்னகை தவழும்.

குருபகவானின் பார்வை

குருபகவான் தனது 5ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 11ம் வீட்டைப் பார்ப்பதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். விலை உயர்ந்த ரத்தினங்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய வீட்டை இடித்துக் கட்டுவது, வீட்டில் கூடுதல் தளம் அமைப்பது, அறைக் கட்டுவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடிவடையும்.

குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மனைவி உங்களுடைய முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார். கல்யாணம், சீமந்தம், கிரகப் பிரவேசம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

குருபகவான் தனது 9ம் பார்வையால் உங்களின் 3ம் வீட்டைப் பார்ப்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். எதிலும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகமாகும். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். அக்கம்பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். நட்பு வட்டம் விரிவடையும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்கள் ராசிநாதனும் அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4ம் பாதம் துலாம் ராசியில் 02.09.2017 முதல் 05.10.2017 வரை குருபகவான் செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் ஆதரவுப் பெருகும்.

வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். மனைவியின் ஆரோக்யம் சீராகும். திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஆனால், எதிர்பாராத பயணங்களும், செலவுகளும் இருந்து கொண்டேயிருக்கும். 06.10.2017 முதல் 07.12.2017 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இனந்தெரியாத கவலைகள் வந்துபோகும்.

கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வாகனத்தில் செல்லும் போது மறவாமல் தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். பணப்பற்றாக்குறையை சமாளிக்க வேண்டி வரும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். இடமாற்றம் உண்டு.

உங்களின் பாக்யவிரயாதிபதியான குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3ம் பாதம் துலாம் ராசியிலேயே 08.12.2017 முதல் 13.02.2018 மற்றும் 04.07.2018 முதல் 02.10.2018 வரை பயணிப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். அறிஞர்களின் அறிமுகம் கிட்டும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்

14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் குருபகவான் சென்று மறைவதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும்.

பணப்பற்றாக்குறையை சமாளிக்க வேண்டியது வரும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். தந்தையாரின் ஆரோக்யம் பாதிக்கும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். தந்தைவழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.

ரிசர்வ் வங்கியின் அனுமதிபெறாத ஃபைனான்ஸ் கம்பெனிகளில் முதலீடு செய்ய வேண்டாம். வட்டிக்கு ஆசைப்பட்டு இருப்பதை இழந்துவிடாதீர்கள். தோல்வி மனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்

07.03.2018 முதல் 03.07.2018 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்ர கதியில் செல்வதால் வீண் பிரச்னை, மனவருத்தம், பிதுர்வழிச் சொத்து சிக்கல்கள், வழக்கால் நிம்மதியின்மை வந்துசெல்லும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். அலர்ஜி, வயிற்று உப்புசம், காய்ச்சல் வந்துபோகும்.

வியாபாரிகளே! இழப்புகளை சரி செய்வீர்கள். சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனைகளையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப புது முதலீடுகள் செய்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வணிகர் சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அதிகம் படித்த, அனுபவமிக்க வேலையாட்களை பணியில் சேர்ப்பீர்கள்.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பிரபலமான இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். மருந்து, பெட்ரோ கெமிக்கல், ஸ்பெகுலேஷன், கட்டிட உதிரி பாகங்கள், போர்டிங், லாட்ஜிங், எலக்ட்ரானிக்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். பிரச்னை தந்த பங்குதாரரை மாற்றி விட்டு உங்களுடைய கருத்துகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்வீர்கள்.

உத்யோகஸ்தர்களே! அலட்சியப் போக்கு மாறும். வேலைச்சுமையும் குறையும். தடைபட்டிருந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்ட மூத்த அதிகாரியின் மனசு மாறும். சக ஊழியர்களும் முக்கியத்துவம் தரத் தொடங்குவார்கள்.

கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். உங்களை அவதூறாகப் பேசியவர்களெல்லாம் உங்களுடைய ஆளுமைத் திறனையும், நிர்வாகத் திறமையையும் பாராட்டுமளவிற்கு நடந்து கொள்வீர்கள். புது பொறுப்புக்கும், பதவிக்கும் உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். பொய் வழக்கிலிருந்து விடுபடுவீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல் கைகூடும். சின்னச் சின்ன தவறுகளையும் திருத்திக் கொள்வீர்கள். அண்டை மாநிலம், அயல்நாட்டில் சிலருக்கு நல்ல வேலை அமையும். அழகு, ஆரோக்யம் கூடும். கூடுதல் மொழியை கற்றுக் கொள்ள ஆசைப்படுவீர்கள். பெற்றோர் பாசமழை பொழிவார்கள். உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும்.

மாணவ, மாணவிகளே! படிப்பில் முன்னேறுவீர்கள். அறிவாற்றல், நினைவாற்றல் கூடும். ஆசிரியர்களின் அன்பும், பாராட்டும் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி தேர்வில் அதிக மதிப்பெண் வர வாய்ப்பிருக்கிறது. விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். உங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். விரும்பிய கல்விப் பிரிவில் சேருவீர்கள்.

கலைத்துறையினரே! புகழடைவீர்கள். அரசு விருது உண்டு. பெட்டிக்குள் முடங்கிய படம் ரிலீசாகும். வரவேண்டிய சம்பளபாக்கி கைக்கு வந்து சேரும். ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

அரசியல்வாதிகளே! உங்களுடைய ராஜ தந்திரத்தால் எதிரிகளை வீழ்த்துவீர்கள். தொகுதி மக்களிடையே செல்வாக்கு உயரும். இளைஞர்களின் ஆதரவு பெருகும்.

விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டை தீரும். மகசூல் பெருகும். எண்ணெய் வித்துக்களால் ஆதாயமடைவீர்கள். இந்த குருமாற்றம் பட்டுப்போன உங்களுடைய வாழ்க்கையை துளிர்க்க வைப்பதுடன், அதிரடி வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம்

திருவள்ளூர் மாவட்டம், திருவெண்பாக்கம் ஊன்றீஸ்வரரை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவுக்கு உதவுங்கள்.

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்