யாழ். குடாநாட்டிலுள்ள முருகன் ஆலயங்களில் சிறப்பாக இடம் பெற்ற குமாராலய தீபம்

Report Print Thamilin Tholan in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasri.com
advertisement

கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு இந்துப் பெருமக்களால் ஆலயங்களிலும் வீடுகளிலும் தீபமேற்றி முருகப் பெருமானை மெய்யன்புடன் வழிபடும் குமாராலய தீபம் கார்த்திகை நட்சத்திர தினமான இன்றைய தினமும், சர்வாலய தீபம் ரோகிணி நட்சத்திர தினமான நாளையும் இடம்பெறுகின்றன.

இன்று திங்கட்கிழமை(12) யாழ்.குடாநாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களான நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம், தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் உள்ளிட்ட முருகப் பெருமான் ஆலயங்களில் முருகப் பெருமானுக்குச் செந்தினை மாவும், தேனும், கலந்து அகல்விளக்கு வடிவில் தீபம் அமைத்து நெய்த் திரியிட்டு மாவிளக்கு ஏற்றி வழிபட்டார்கள்.

advertisement

அத்துடன் ஆலய வாசல்களில் பனை ஓலைகளால் கோபுர வடிவில் செய்யப்பட்ட சொக்கப் பனை ஏற்றியும் வழிபட்டார்கள்.

குறிப்பாக வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனைக்கு இன்று மாலை-05.30 மணியளவில் வள்ளி சமேத தெய்வயானை சகிதமாக முருகப் பெருமான் கைலாசவாகனத்தில் எழுந்தருளிய பின்னர் ஆலய சிவாச்சாரியாரால் தீபமேற்றப்பட்டது.

நல்லூர்க் கந்தன் முன்றலில் ஏற்றப்பட்ட தீப ஒளி தீச்சுடராக பாரியளவில் ஒளிவீசிப் பிரகாசித்தது. சொக்கப் பனையில் ஏற்றப்படும் தீச்சுடரைத் தரிசனம் செய்வது பெரும் முத்தியைத் தரும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.

நல்லூரில் ஏற்றப்பட்ட சொக்கப் பனையைத் தரிசிக்க யாழ்.குடாநாடு மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சைவர்கள் மாத்திரமன்றி பெளத்தர்கள், இஸ்லாமியர்களும் கலந்து கொண்டு முருகப் பெருமானின் அருள் வேண்டித் துதித்தனர்.

சொக்கப் பனை எரிவுற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமான் மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்ட கைலாச வாகனத்தில் அலங்கார நாயகனாக வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

advertisement

நல்லூர்க் கந்தன் ஆலயத்தைச் சூழவுள்ள நல்லை ஆதீன குருமூர்த்த ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களின் முன்பாகவும், துர்க்கா மணிமண்டபம், அறுபத்து நாயன்மார் மண்டபம் உள்ளிட்ட மண்டபங்களின் முன்பாகவும் வரிசைக் கிரமமாகத் தீபங்கள் ஏற்றியும், பூரண கும்பங்கள் வைத்தும் வழிபட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments