குருவின் பார்வையால் அடிபொலி யோகம் உங்களுக்கு கிடைக்கும்

Report Print Deepthi Deepthi in ஜோதிடம்

மிதுனம் ராசியினரே

எதிலும் புதுமையை புகுத்துபவர்களில் வல்லவர்களான நீங்கள், பொது உடைமைச் சிந்தனையும் அதிகம் உள்ளவர்கள். நிறை குறைகளை அலசி ஆராய்ந்து மற்றவர்களை துல்லியமாக கணிக்கும் நீங்கள் சிரமப்படுபவர்களை கைதூக்கி விடுபவர்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் அமர்ந்து உங்களின் வருங்காலத் திட்டங்களை நிறைவேற்றியதுடன், குடும்ப வருமானத்தையும் ஓரளவு உயர்த்திய குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை ராசிக்கு 6ம் வீட்டில் மறைகிறார். சகட குருவாச்சே! சங்கடங்களையும், எதிர்ப்புகளையும் தருவாரே என்று கலங்காதீர்கள்.

ஓரளவு நல்லதே நடக்கும். வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். சமூகத்தின் மீதும் சின்னச் சின்ன கோபமெல்லாம் வந்து நீங்கும்.

சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தவர்கள் உங்களுக்கு உதவாமல் போகக்கூடும்.

எனவே மாற்றுவழியை யோசிப்பது நல்லது. சிலர் உங்களைப் பார்த்தால் புகழ்ந்து பேசுவதும், நீங்கள் இல்லாத போது உங்களை விமர்சிக்கவும் செய்வார்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம்.

எல்லா இடங்களிலும் நான் தான் விட்டுக் கொடுத்துப் போக வேண்டுமா என்றெல்லாம் சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவீர்கள். மனிதர்களின் இரட்டை வேடத்தை நினைத்து கோபப்படுவீர்கள். நீங்கள் சிரித்தால் உலகமும் சிரிக்கும், நீங்கள் கோபப்பட்டால் உலகமும் கோபப்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும்.

குருபகவானின் பார்வை பலன்கள்

குருபகவான் குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பணவரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டு. அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சாமர்த்தியமாகப் பேசி காய் நகர்த்துவீர்கள்.

பழைய நகையை மாற்றி புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். மகளுக்கு திருமணம் நிச்சயமாகும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். குரு 10ம் வீட்டைப் பார்ப்பதால் புது வேலை கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். கடினமான வேலைகளையும் எளிதாக முடிக்கும் சக்தி கிடைக்கும்.

பழைய சிக்கலில் ஒன்று தீரும். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். குரு 12ம் வீட்டை பார்ப்பதால் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சுபசெலவுகளும் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் சப்தமஜீவனாதிபதியான குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச்சுமை, வீண் அலைச்சல், கணவன்மனைவிக்குள் மனஸ்தாபம், எதிலும் பற்றற்ற போக்கு, மனைவிக்கு மருத்துவச் செலவுகள், உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து போகும். உங்களைப் பற்றி சிலர் அவதூறு பேசுவார்கள்.

அரசுக்கு செலுத்த வேண்டிய வருமான வரி, சொத்து வரிகளையெல்லாம் தாமதமின்றி செலுத்தப்பாருங்கள். வாகனம் பழுதாகி சரியாகும். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் அஷ்டமபாக்யாதிபதியான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பணம் வரத் தொடங்கும். வருமானம் உயரும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

தந்தையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வேற்று மதத்தவர்கள், அண்டை மாநிலத்தில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. புது பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். 20.12.2018 முதல் 12.03.2019 மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை உங்கள் ராசிநாதனும் சுகாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. தோற்றப் பொலிவு கூடும்.

கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். அறிவு பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். தாயாரின் உடல் நிலை சீராகும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை அமைப்பீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்

13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 7ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் அக்காலக்கட்டத்தில் செல்வாக்குக் கூடும். பணவரவு உண்டு. வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்

10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

பூர்வீக சொத்தில் உங்கள் ரசனைக் கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும். என்றாலும் முன்கோபம், திடீர் பயணங்கள், கடன் பிரச்னைகள் வந்து செல்லும். ஷேர் மூலம் பணம் வரும்.

வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். அவர்களிடம் வேலை வாங்குவதற்குள் அவர்களை எதிர்பார்க்காமல் நாமே அந்த வேலையை செய்து விடலாம் என்று முடிவெடுப்பீர்கள். தொழிலில் போட்டி அதிகமாகும். வாடிக்கையாளர்களை கடிந்துகொள்ளாதீர்கள்.

உத்யோகத்தில் என்னதான் உண்மையாக உழைத்தாலும் எந்த பலனும் இல்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உண்மையாக இருப்பது மட்டும் போதாது உயரதிகாரிகளுக்கு தகுந்தாற்போலும் பேசும் வித்தையையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற முடிவிற்கு வருவீர்கள்.

சக ஊழியர்களின் விடுப்பால் வேலைச்சுமை அதிகமாகும். வேறு சிலர் செய்த தவறுகளுக்கெல்லாம் நாம் பலிகடா ஆகி விட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். புது உத்யோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது. உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் கொஞ்சம் இழுபறி நிலை நீடிக்கும்.

கன்னிப் பெண்களே!

காதல் கசந்து இனிக்கும். உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். பெற்றோருடன் இருந்து வந்த கருத்து மோதல் நீங்கும். வெளி மாநிலத்தில் வேலை கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ற வாழ்க்கைத் துணை அமையும்.

மாணவ மாணவிகளே!

யோகா, தியானம் செய்து நினைவாற்றலை அதிகப்படுத்தப்பாருங்கள். உயர்கல்வியில் விளையாட்டுத்தனம் வேண்டாம். நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுக்கு முழு நேரம் ஒதுக்கி தயார்படுத்திக் கொள்ளுங்கள். வகுப்பறையில் கேள்வி கேட்க தயக்கம் வேண்டாம்.

கலைத்துறையினரே!

மறைமுக போட்டிகள், விமர்சனங்கள் அதிகரிக்கும். வர வேண்டிய சம்பள பாக்கியை போராடிப் பெறுவீர்கள். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள்.

அரசியல்வாதிகளே!

எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப் பாருங்கள். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகழடைவீர்கள். தலைமையால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.

விவசாயிகளே!

அகலக் கால் வைத்து கடன் பிரச்னையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். காட்டு வெள்ளாமை வீட்டிற்கு வரும் வரை எதுவும் நிலையில்லை என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த குரு மாற்றம் நெருக்கமானவர்களின் மற்றொரு முகத்தை காட்டிக் கொடுப்பதுடன், பணத்தின் அருமையை புரிய வைப்பதாகவும் சகிப்புத் தன்மையால் கொஞ்சம் வளர்ச்சியையும் தரும்.

பரிகாரம்

முடிந்தால் வியாழக்கிழமைகளில் ஒரு பொழுது உணவை கடைபிடிக்கலாம். குரு பகவானுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறையேனும் ஹோமம் செய்யவும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்