222 பேர் பயணித்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றை வெடிக்கச் செய்யப்போவதாக மிரட்டிய இலங்கையர் வழக்கில் முக்கிய திருப்பமாக, அவரது தண்டனைக்காலத்தை குறைத்து இன்று மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மெல்போர்னிலிருந்து இலங்கை புறப்பட்ட விமானம் ஒன்றில் பயணித்த Manodh Marks (27) என்னும் இலங்கையர், தன் கையில் வெடுகுண்டு போன்று தோன்றும் ஒரு கருவியுடன் விமானத்தை வெடிக்கச் செய்யப் போவதாக மிரட்டினார்.
பின்னர் கைது செய்யப்பட்ட அவருக்கு 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஒன்று 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
இந்நிலையில் மேல் முறையீட்டு நீதிமன்றம் ஒன்று, Manodh அந்த நேரத்தில் மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அத்துடன் அவர் கையில் வைத்திருந்தது உண்மையான வெடிகுண்டு இல்லை என்பதாலும் அவரது தண்டனையை குறைத்துள்ளது.
விக்டோரியா மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றம், சமீபத்தில்தான் அவர் மன நல சிகிச்சை எடுத்திருந்ததையும் கருத்தில் கொண்டு, Manodhஇன் தண்டனைக்காலத்தை எட்டு ஆண்டுகளாக குறைத்து இன்று தீர்ப்பளித்தது.
அதனால் Manodh எதிர்பார்த்ததை விட விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளார்.