மேற்கிந்திய தீவுகளை பழிதீர்த்த இங்கிலாந்து! 232 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

Report Print Kabilan in கிரிக்கெட்

செயிண்ட் லூசியா மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 232 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது.

இங்கிலாந்து-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செயிண்ட் லூசியாவில் நடந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 277 ஓட்டங்களும், மேற்கிந்திய தீவுகள் அணி 154 ஓட்டங்களும் எடுத்தன.

பின்னர் 123 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 4வது நாளில் 5 விக்கெட் இழப்புக்கு 361 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஜொ ரூட் 122 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன்மூலம் மேற்கிந்திய தீவுகளுக்கு 485 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியில் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தன. 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் ரோஸ்டன் சேஸ் களமிறங்கினார்.

நிதானமாக ஆடிய அவர் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார். ஆனால், மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. ஆண்டர்சன், மொயீன் அலியின் அபார பந்துவீச்சினால் மேற்கிந்திய தீவுகள் அணி 252 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

ரோஸ்டன் சேஸ் அதிகபட்சமாக 102 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 232 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆண்டர்சன், மொயீன் அலி தலா 3 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஏற்கனவே முதல் 2 போட்டிகளில் தோல்வியுற்றதால் தொடரை இழந்த இங்கிலாந்து, இந்தப் போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது.

ICC

Reuters Photo

Reuters

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...