இந்தியாவை உலுக்கிய புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட நபர் கண்டுபிடிப்பு!

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட இளைஞரை புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த மாதம் இந்தியாவின் காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில், சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதனைத் தொடர்ந்து, விசாரணையைத் தீவிரப்படுத்திய தேசிய விசாரணை முகமை அதிகாரிகள், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் அதன் உரிமையாளர்களைக் கண்டுபிடித்தனர்.

இதன்மூலம் தற்கொலைப்படைத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி, தாக்குதல் நடத்துவதற்கு 10 நாட்களுக்கு முன்பு தான் அந்த காரை வாங்கியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் விசாரணையை தொடர்ந்ததில் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரை தேசிய விசாரணை முகமை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

REUTERS

இதுதொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி முடாசிர் அகமது கான் என்கிற முகமது பாய் என்பது தெரிய வந்தது.

எங்களுக்கு கிடைத்த அனைத்து ஆதாரங்களையும் திரட்டி, ஒன்று சேர்த்ததில் இந்த தாக்குதலுக்கு அகமது கான் மூளையாக இருந்துள்ளார் என்பதை கண்டுபிடித்துள்ளோம். புல்வாமா மாவட்டம், டிரால் பகுதியில் உள்ள மிர் மொஹாலா பகுதியைச் சேர்ந்த 23 வயதான அகமது கான், பட்டப்படிப்பு முடித்துவிட்டு ஐ.டி.ஐ படித்தவர்.

புல்வாமா தாக்குதலுக்கு தேவையான காரை விலைக்கு வாங்கி, அதை அதில் அகமதுவுக்கு வழங்கியவர் அகமதுதான். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு அடிப்படை கட்டமைப்பு பணிகளில் அகமது கான் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டிலேயே ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் சேர்ந்த அகமது கான், அந்த அமைப்பின் மூத்த உறுப்பினர் நூர் முகமது தாந்தரேயுடன் பழகினார். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தீவிரவாத செயல்கள் அதிகம் நடைபெற நூர்முகமது முக்கிய காரணமாக இருந்தவர்.

மேலும், தெற்கு காஷ்மீரின் பீஜ்பேஹ்ரா பகுதியைச் சேர்ந்த சஜாத் பாட் என்பவர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் தொடர்ந்து இருந்து வருகிறார் என்பதையும் கண்டுபிடித்துள்ளோம்’ என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்