இறுதிச்சடங்கிற்கு கூட பணமில்லாமல் நடந்த துயரம்... தமிழ் திரைபிரபலத்திற்கு ஏற்பட்ட பரிதாபநிலை

Report Print Santhan in இந்தியா

தமிழ் திரையுலகின் பிரபல பாடலாசிரியர் முத்து விஜயன் காலமானதை தொடர்ந்து அவரின் இறுதிச் சடங்கிற்கு யாரும் பணம் கொடுத்த உதவவில்லை என்று அவருடைய நண்பர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது உச்ச நட்சத்திரங்களாக தமிழ் திரையுலகில் இருக்கும் நடிகர் அஜித், விஜய், பிரபுதேவா மற்றும் சிலரின் படங்களுக்கு பாடல் எழுதியிருந்தவர் முத்து விஜயன்.

குறிப்பாக தமிழ் ரசிகர்கள் தற்போது பாடிக் கொண்டிருக்கும் மேகமாய் வந்து போகிறேன் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் இவர் தான்.

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இவர் தனது 48 வது வயதில் அவர் மஞ்சள் காமாலை நோயால் காலமானார்.

அவரது மறைவு குறித்து முத்துவிஜயனின் நண்பரும் கவிஞருமான ஆசு சுப்பிரமணியம் எழுதியுள்ள குறிப்பில், திரைப்பட பாடலாசிரியர் முத்து விஜயன் காலமாகிவிட்டார்.

வருத்தமளிக்கிறது, அவரது உடல் நிலை சுகவீனமடைந்து மரணத்தை தழுவிவிட்டார். கவிதை எழுதி, பிறகு திரைப்படப் பாடலாசிரியர்கள் ஆன நிறையப் பேர் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள்.

கவிஞர்களில், கவிஞன், திரைக் கவிஞன் என்கிற பாகுபாடு என்பதெல்லாம் இல்லை. படைப்பு பாடல் வடிவத்திலும் உள்ளது.

திரைத்துறையில், செல்வாக்கு தான் முக்கியமாக இருக்கிறது. நடிகன், நடிகை இயக்குநர், இசைவாணன் கதையாசிரியன், தயாரிப்பாளர், பாடலாசிரியன் யாராக இருந்தாலும், செல்வாக்கை வைத்து, ஒரு படைப்பாளனைக் கொண்டாடுவது, மரியாதை கொடுப்பது, திரைத்துறையில் மட்டுமல்ல. இலக்கியத் துறையிலும் பெருத்த அவமானமே.

இன்று காலமான கவிஞன் முத்து விஜயன், அவனுக்கென்று ஒரு செல்வாக்கை உருவாக்காத காரணத்தால், உடல் நிலை மோசமாக இருந்த போது, திரைப்படப் படைப்புலகம் கண்டு கொள்ளாதது மிகுந்த துயரமே.

அவன் சாவை சொந்த ஊருக்கு ஆம்புலன்சில் கொண்டு போக ரூபாய் 20,000 தேவைப்படும் நிலையிலும், உதவ முன்வராத திரைப்பட உலகில், அவன் உடலை சென்னையிலேயே அடக்கம் செய்தனர்.

மனிதத்துவம் இழந்து நிற்கும், திரைப்பட படைப்புலகம் செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமா? அவன் பாடல் அவன் வாழ்வுப் போல காற்றில் கலந்து கண்ணீராய்க் கரைகிறது. ஒரு கவிஞன் என்கிற முறையில் ஆழ்ந்த இரங்கல் முத்து விஜயன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்