பணியின் போதே தரைமட்டமாக இடிந்து விழுந்த 7 மாடி கட்டிடம்! 18 பேர் பலி

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

கம்போடியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் கட்டிடம் இடிந்து தரைமட்டமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய கண்டத்தில் அமைந்துள்ள நாடு கம்போடியா. இந்நாட்டின் சிஹானோக்வில்லி நகரில், சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் 7 மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடத்தை உருவாக்கி வருகிறது.

இந்த கட்டிடத்தின் 80 சதவித பணி நிறைவடைந்த நிலையில், தொழிலாளர்கள் நேற்று வழக்கம்போல் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மொத்த கட்டிடமும் சில நொடிகளில் நொறுங்கி விழுந்து தரைமட்டமானது.

இந்த கோர விபத்தில் வேலையில் ஈடுபட்டிருந்த சுமார் 50 தொழிலாளர்கள் சிக்கினர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர்.

அவர்களில் 20க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக, உள்ளூர் ஊடகங்கள் முதல் கட்டமாக செய்தி வெளியிட்டன.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காயமடைந்தவர்களில், சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 24 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கவனக்குறைவு காரணமாகவே இந்த துயர சம்பவம் நடந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தலா 10 ஆயிரம் டொலர்கள் இழப்பீட்டை அரசு வழங்கும் என்றும், அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

AFP

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்