இந்திய-சீனாவிடையே முற்றும் மோதல்... லாடாக் பகுதியை சீனா கைப்பற்ற துடிப்பது ஏன்? அதன் முழு பின்னணி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இந்தியாவின் லடாக் பகுதி இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே தீராத பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த பிரச்சனை நேற்று, இன்று உதித்தது அல்ல, கடந்த 1958-ஆம் ஆண்டில் இந்தியாவின் லடாக் பகுதியை தனது வரைபடத்தை சீனா வெளியிட்டது.

அன்றில் இருந்து இன்று வரை இந்தப் பிரச்சனை இருந்து வருகிறது.

அந்த ஆண்டில் சீனா தனது நாளிதழ் ஒன்றில் குறிப்பிட்ட வரைபடத்தை வெளியிட்டு இருந்தது. இந்த இதழ் வருவதற்கு முன்பே லடாக்கை சீனாவின் ஜின்ஜியாங் பகுதியுடன் இணைக்கும் வகையில் சீனா சாலையை அமைக்கத் துவங்கியது.

அப்போது இருந்தே இரு நாட்டுத் தலைவர்களும் லடாக் குறித்து கடிதங்களை பரிமாறிக் கொண்டனர்.

தெற்கில் சன்ஸ்கர் மலைப்பகுதியில், வடக்கில் காரகோரம் மலைப்பகுதியில் லடாக் பகுதி அமைந்து இருக்கிறது. இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த யூனியன் பிரதேசமாக இது விளங்குகிறது.

இதனால்தான், ஜம்மு காஷ்மீரில் இருந்து லடாக் பகுதியைப் பிரித்த பின்னர், தற்போது லடாக் யூனியன் பிரதேசமாக இருக்கிறது.

இது பின்னர் ஜம்மு காஷ்மீருடன் இணைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.

ஆசியாவின் பொருளாதார மண்டலங்களை அதாவது மத்திய ஆசியா, தெற்கு ஆசியா, சீனா ஆகியவற்றை இணைக்கும் இடத்தில் லடாக் அமைந்துள்ளது.

இங்கு வரையறுக்கப்படாமல் இருக்கும் எல்லைப் பகுதியை ஆக்ரமிக்க சீனா கடந்த 1962-ஆம் ஆண்டு எல்லையில் ஆக்கிரமிப்பை துவங்கியது.

இதனால், இருநாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டது. அப்போது, சிம்லா ஒப்பந்தத்தில் ஏற்படுத்தப்பட்ட மக்மோகன் எல்லைக்கோடு ஒப்பந்தத்தையும் மதிக்காமல், இந்தியாவையும், சீனாவையும் பிரிக்கும் 3,225 கி. மீற்றர் எல்லைப் பகுதியை ஒட்டிய இந்திய எல்லைக்குள் சீனா படைகளை அனுப்பியது.

இந்தியாவுக்கு சொந்தமான மேற்கில் ரெசாங், சுசுல், கிழக்கில் தவாங் ஆகிய இடங்களை சீனா ஆக்கிரமிப்பு செய்தது.

இதன் பின்னர் 1962-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் திகதி போரில் இருந்து பின் வாங்குவதாக சீனா அறிவித்தது.

இதையடுத்து நாடாளுமன்றத்தில் அப்போதைய பிரதமர் நேரு, லடாக்கின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் மக்கள் வசிக்கவில்லை. அங்கு ஒரு புல் கூட வளராது என்று தெரிவித்து இருந்தார்.

1834-ஆம் ஆண்டில் லடாக் பகுதியில் டோக்ரா படையெடுக்கும் முன்பு பூடான், சிக்கிமை போல தனிசுயாட்சி அதிகாரம் பெற்ற பகுதியாக லடாக் இருந்துள்ளது.

திபெத்தின் வரலாறு, பண்பாட்டைத்தான் லடாக்கும் பின்பற்றுகிறது. மொழியும் திபெத் மக்கள் பேசும் மொழிதான் இங்கும் பின்பற்றப்படுகிறது. அரசியல் ரீதியாகவும் இந்த மொழிதான் பின்பற்றப்படுகிறது.

வரலாற்று ஆய்வாளர் ஜான் பிரே எழுதி இருக்கும் லடாக் வரலாறு மற்றும் இந்திய தேசியம் என்ற தனது புத்தகத்தில், திபெத் மன்னர் லாங்க்தர்மா கொலை செய்யப்படும்போது, திபெத்தின் ஒரு பகுதியாக லடாக் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் லடாக் தனிப் பிரதேசமாக உருவானது. இதன் பெரும்பாலான பகுதி இன்றும் திபெத்தின் மேற்குப் பகுதியாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

லடாக் மத்திய ஆசியாவுக்கும், காஷ்மீருக்கும் ஒரு இணைப்பு பாலமாக இருந்து வருகிறது. திபெத்தியர்களின் கைவேலைப்பாடுகள் நிறைந்த ஷால்கள் லடாக் வழியாக காஷ்மீருக்குள் கொண்டு வரப்படுகிறது.

மேலும் யார்கன்ட், காஷ்கர் வழியாக காரகோரம் பாதையில் சீனாவின் துர்கெஸ்தானுக்கு சென்று வந்தனர் என்று பிரே தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

1819ஆம் ஆண்டில் சீக்கியர்கள் காஷ்மீர் பகுதியை பிடித்தனர். அப்போது, லடாக் பகுதியை பேரரசர் ரஞ்சித் சிங் காஷ்மீருடன் இணைக்க வேண்டும் என்று திட்டமிட்டார். ஆனால், குலாப் சிங்தான் லடாக் பகுதியை காஷ்மீருடன் இணைந்தார்.

1845-46ல் ஆங்கிலயர்கள், சீக்கியர்கள் போருக்குப் பின்னர், சீக்கிய மன்னரிடம் இருந்து ஜம்மு காஷ்மீர், லடாக் பிரிக்கப்பட்டு, பிரித்தானிய ஆட்சியாளர்களின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இந்த வரலாற்றின்படி ஜம்மு காஷ்மீரை தங்களது பாதுகாப்புப் கேடயமாக பிரித்தானியர் வைத்து இருந்தனர் என்பது புரியும். அவர்களை மீறி இந்தியாவுக்குள் ரஷ்யர்கள் வந்துவிடாமல் தடுக்கும் ஒரு பாதுகாப்பு பாலமாக வைத்து இருந்தனர்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் இருந்து லடாக் எல்லையை எங்கு பிரிப்பது என்ற சிக்கலும் உருவானது. சுதந்திரத்துக்கு முன்பு மக்களுக்கும் எல்லை எது என்பதில் குழப்பம் இருந்தது.

ஆனால், பிரித்தானியா நிர்ணயித்த மேப்பின் அடிப்படையில்தான் இன்று இந்தியா கோரிக்கை வைத்து வருகிறது.

1950-ல் திபெத்தை சீனா ஆக்ரமித்த பின்னர் லடாக் பகுதியின் மீது சீனாவின் அக்கறை அதிகரித்தது. காஷ்மீரின் ஒரு பகுதியாக, ல்டாக்கின் அங்கமாக இருந்த அக்சய் சின் பகுதியையும் ஆக்கிரமித்தது.

இதையடுத்து திபெத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள, லடாக்கை ஒட்டி, 1956-57-ல் சீனா சாலை அமைத்தது. இது நேரு அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு பகுதியாக திபெத் இருக்கும் என்று இந்தியா நினைத்து இருந்தது. அங்கேயும் சீனா ஊடுருவியது.

இதுமட்டுமில்லை, தற்போதும் பாகிஸ்தானை சில்க் சாலை என்ற பெயரில் இணைக்கும் திட்டத்தை சீனா அமைத்து வருகிறது.

இதை சீன, பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் என்று அழைக்கின்றனர். இது இந்தியாவுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதுடன், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது.

தொடர்ந்து லடாக்கை ஒட்டிய எல்லைப் பகுதியில் நில ஆக்கிரமிப்பில் சீனா ஈடுபட்டு வருகிறது. ஆதலால், பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.

லடாக், சியாசின் கிளேசியர் பகுதிகளை ஆக்ரமிக்க காலம், காலமாக சீனாவும், பாகிஸ்தானும் முயற்சித்து வருகின்றன. இந்தப் பகுதியில் இந்தியா தனது இராணுவத்தை வலுவான நிலையில் நிறுத்தி இருப்பதால், சீனா, பாகிஸ்தான் நாடுகள் திணறி வருகின்றன.

ஒவ்வொரு முறையும் லைன் ஆப் ஆக்சுவல் கன்ட்ரோல் பகுதியில் ஊடுருவி சில கிலோ மீற்றர் நிலங்களை ஆக்கிரமித்து வருகிறது. 2013-ல் சீனா அக்சய் சின் பகுதியில் 13 கிலோ மீற்றர் தொலைவை ஆக்கிரமித்து முகாம் அமைத்தது.

அக்சய் சின் பகுதி லடாக்கின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த இடம் ஜிஜியாங் பகுதியையும், திபெத்தையும் இணைக்கிறது.

லடாக் பகுதியில் என்னென்ன கனிம வளங்கள் இருக்கிறது என்பது இன்னும் அறியப்படவில்லை.

இது இந்தியாவுக்கு ஊக்கமளிக்கும் ஒரு பொருளாதார மண்டலாமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இங்கு இருக்கும் பழைய ஆயில் எண்ணெய் கிணற்றை இந்திய இயக்கி வருகிறது.

முன்பு லே பகுதியை எரிவாயு எண்ணெய்களுக்கு எதிர்பார்த்து இருந்தது. அக்சய் சின் பகுதியை இணைக்கும் வகையில் இந்தியா சாலை அமைத்து வருகிறது.

இதை சீனா எதிர்த்து வருகிறது. இதற்குக் காரணம் மத்திய ஆசியா, பாகிஸ்தான் சீனாவை இணைக்கும் இடமாக அக்சய் சின் இருப்பதால் சீனாவுக்கும் அந்தப் பகுதி முக்கியமானதாக இருக்கிறது. இங்குதான் சீனா பொருளாதார மண்டலத்தை அமைத்து வருகிறது.

எல்லைப் பகுதியில் இந்தியா முதலில் 2013ல் கட்டமைப்புப் பணிகளை துவக்கியது. தொடர்ந்து 2015ஆம் ஆண்டிலும் இங்கு கட்டமைப்பு பணிகளை இந்தியா துரிதமாக்கியது.

இதையடுத்து 2019ல் ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்து லடாக் தனி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டது. இந்தப் பகுதியில் பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் இந்தியாவின் திட்டம்.

இதை சீனா அறவே விரும்பவில்லை. லடாக் தனி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டதன் மூலம் ஜம்மு காஷ்மீரின் முழுப் பகுதியின் மீதும் இந்தியா உரிமை கோருகிறது என்று சீனா ஆக்ரோஷம் அடைந்துள்ளது. இதுதான் தற்போதைய சிக்கலுக்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் எல்லையில் கல்வான் பகுதியில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

இதில் இந்தியஇராணுவ வீரர்கள் 20 கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இந்தப் பகுதியும், லடாக் பகுதியும் பதட்டத்துடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்