கொரோனா பரவலை எதிர்கொள்ள நியூசிலாந்தில் அமுலுக்கு கொண்டுவந்த முதல் ஊரடங்கு நடவடிக்கை சட்டவிரோதம் என அங்குள்ள உயர் நீதிமன்றம் தற்போது கண்டறிந்துள்ளது.
நியூசிலாந்தில் கொரோனா பரவலை எதிர்கொள்ள பிரதமர் ஜெசிந்தா உள்ளிட்ட நிபுணர்கள் குழு மார்ச் 26 முதல் ஏப்ரல் 3 வரை 9 நாட்கள் கட்டாய ஊரடங்கை அமுலுக்கு கொண்டுவந்தனர்.
இந்த நடவடிக்கை சட்டப்பூர்வமானதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என வெலிங்டன் வழக்கறிஞர் ஆண்ட்ரூ பரோடேல் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
இந்த வழக்கை விரிவாக விசாரணை மேற்கொண்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு, ஊரடங்கின் சட்டபூர்வமான தன்மை குறித்த புகார்களைத் தள்ளுபடி செய்தது.
ஆனால் நியூசிலாந்து மக்கள் தங்கள் குடியிருப்புகளில் தங்க வேண்டும் என்ற ஆரம்ப கோரிக்கையை சட்டத்தின்படி அமுலுக்கு கொண்டுவராததன் மூலம் அதிகாரிகள் தவறு செய்ததாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
சட்டத்துக்கு உட்பட்டு, ஏப்ரல் 3 ஆம் திகதி வரை எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்பதால்,
நியூசிலாந்து மக்களின் அடிப்படை சுதந்திரங்கள் அந்த முதல் ஒன்பது நாட்களுக்கு சட்டவிரோதமாக மட்டுப்படுத்தப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் 23 அன்று பிரதமர் ஜெசிந்தா ஊடகங்கள் வாயிலாக நாட்டு மக்களுக்கு ஊரடங்கு தொடர்பில் அறிவிப்பு வெளியிட்டார்.
தொடர்ந்து ஊரடங்கு அமுலுக்கு வந்ததுடன், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. இதனால் நியூசிலாந்தில் இதுவரை 1,649 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
மட்டுமின்றி சிகிச்சை பலனின்றி 22 பேர் மட்டுமே மரணமடைந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த நாடு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் பொதுநலன் கருதி, சட்டத்திற்கு உட்பட்டு மட்டுமே முன்னெடுக்கப்பட்டதாக அரசு சார்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.