வட கொரிய அதிபர் கிம்ஜாங் உன் கோமாவில் இருக்கிறார், இறந்துவிட்டார் என்றெல்லாம் தொடர்ந்து செய்திகள் வெளியான நிலையில், அவற்றையெல்லாம் பொய்யாக்கும் விதத்தில் வட கொரிய அரசு புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன் முன்னாள் தென் கொரிய அதிபர் ஒருவரின் உதவியாளராக இருந்தவரான சேங் சாங் மின் (Chang Song-min) என்பவர், ஏப்ரல் மாதத்திலிருந்தே கிம் கோமாவிலிருப்பதாகவும், வெளியாகும் படங்களில் இருப்பவர் கிம் அல்ல, போலியான ஒருவர் என்று ஊடகங்களுக்கு பேட்டியளித்திருந்தார்.
அத்துடன், கிம்மின் சகோதரியான கிம் யோ ஜாங் அடுத்த தலைவராக பயிற்றுவிக்கப்படுகிறார் என்றும், அதற்காகவே அவருக்கு நாட்டின் இரண்டாம் தலைமைப் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
கிம்மின் சகோதரிக்கு, அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கான வெளியுறவு கொள்கைக்கான பொறுப்பும் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டின் இரண்டாம் தலைமைக்கு சமமான இந்த பொறுப்பு கிம்மி சகோதரிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால், ஒன்றில் கிம்மின் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கவேண்டும் அல்லது ஆட்சிக் கவிழ்ப்பு நடந்திருக்கவேண்டும் என்கிறார் சாங்.
இந்த செய்திகளை பொய்யாக்கும் விதத்தில், வட கொரிய அரசு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
அவை, கொரோனா மற்றும் சில நாட்களில் நாட்டைத் தாக்கவிருக்கும் புயல் ஒன்றிலிருந்து மக்களை காக்கும் நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பான கூட்டம் ஒன்றில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அவற்றில் கிம் உற்சாகமாக காணப்படுவதைக் காணமுடிகிறது. ஆனால், அந்த புகைப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டவை என்பதைக் காட்டும் ஆதாரங்கள் எதுவும் அவற்றில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.