ஏலியன்களிடமிருந்து பூமியை காக்க ஆள் எடுக்கும் நாசா: சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Report Print Santhan in விஞ்ஞானம்
483Shares

ஏலியன்களிடமிருந்து பூமியை பாதுகாக்க பாதுகாப்பு அதிகாரிகளை நாசா நியமிக்க உள்ளது என்றும் அவருக்கு ஊதியம் 1,87,000 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசா ஏலியன்களின் பாதிப்புகளிலிருந்து பூமியை பாதுக்காக்க பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க உள்ளது.

பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்படவுள்ளவர், வேற்றுகிரகவாசிகளால் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்றும் அதேபோல மனிதர்களால் வேறு கிரகங்கள் மற்றும் நிலவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் எனவும் அவருக்கு 1 லட்சத்து 87 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

கிரக பாதுகாப்பு அதிகாரியின் வேலைகள்

விண்வெளி ஆராய்ச்சிக்காக பூமியிலிருந்து அனுப்பப்படும் மனிதர்கள் மற்றும் ரோபோ எந்திரங்கள் மூலம் பூமியைச் சேர்ந்த உயிரினங்கள் வேறு கிரகங்களுக்கோ அல்லது நிலவுக்கு செல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதே போல வேறு கிரகங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு பின்னர் மீண்டும் பூமிக்கே திரும்பும் விண்கலன்கள், ரோபோக்கள் மற்றும் மனிதர்கள் மூலமாக, வேற்று கிரக உயிரினங்கள் பூமிக்கு வந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.

நாம் மும்மரமாக ஆய்வு மேற்கொண்டு வரும் செவ்வாய் கிரகத்தில் நீர் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதால், அங்கு உயிரினங்கள் இருந்திருக்க வாய்ப்புகள் இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுவதால், செவ்வாய் கிரகத்திற்கு சென்று திரும்பும் விண்கலன்களில் வேற்றுகிரக உயிரினங்கள் இருக்கிறதா என்று பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்ய வேண்டும்.

இதுபோல பூமியில் இருந்து செல்லும் மற்றும் பூமிக்கு திரும்பி வரும் அனைத்து விண்கலன்களையும் பாதுகாப்பு அதிகாரி சோதனையிட வேண்டும்.

இந்த வேலைக்கான தகுதிகள்

கிரக பாதுகாப்பு அதிகாரி வேலைக்கு தேர்தெடுக்கப்படும் நபர், ஒரு அரசாங்கத்தின் இராணுவம் அல்லாத உயர் அதிகாரியாக இருக்க வேண்டும். கணிதம், பொறியியல் அல்லது உயிரினங்கள் குறித்த அறிவியல் தொடர்பான பாடத்தில் உயர்கல்வி முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படுபவர் அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டும், அதிகமாக படிக்க, எழுத வேண்டி இருக்கும். மேலும் அவர் விண்வெளி ஆராய்ச்சி, பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் மேம்பட்ட அறிவுடன் இருக்க வேண்டும்.

அமெரிக்கர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் நாசா கூறியுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்