சுவிட்சர்லாந்தில் இனப் பாகுபாட்டுக்கு எதிராக போராடும் இன்னொரு கருப்பினத்தவர்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் குடியுரிமை பெற்ற கென்யா நாட்டவரான ஒருவர் இன ரீதியாக குறிவைக்கப்பட்டதாக வழக்கு தொடர்ந்தபோது எந்த சுவிஸ் நீதிமன்றமும் அவருக்கு செவிமடுக்காத நிலையில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்திற்கு இந்த பிரச்சினையைக் கொண்டு சென்றுள்ளார்.

சுவிஸ் குடியுரிமை பெற்றவரான Mohamed Wa Baile சூரிச் ரயில் நிலையத்தில் பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அவரது அடையாள அட்டையைக் காட்டுமாறு பொலிசார் அவரை வற்புறுத்தினர். சூரிச்சிலுள்ள ETH தொழில்நுட்ப நிறுவனத்தில் லைப்ரரியனாக பணிபுரியும் Wa Baile, வெள்ளையரல்லாத ஒருவரைத் தேடுகிறீர்களா என்று பொலிசாரிடம் கேட்டார்.

பொலிசார் இல்லை என்று கூறியபோது, அப்படியானால் தனது அடையாள ஆவணங்களைத் தர இயலாது என்று கூறி அவர் மறுத்துவிட்டார்.

பொலிஸ் அதிகாரிகள் அவரை சோதனையிட்டனர். அவரிடம் முறையான ஆவணங்கள் இருப்பதைக் கண்டபிறகே அவரை அவர்கள் விடுவித்தனர்.

பொலிசாரின் உத்தரவுக்கு கீழ்ப்படிய மறுத்ததற்காக Wa Baileக்கு 100 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால் Wa Baile அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து இந்த விடயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார்.

நிறத்தின் அடிப்படையில் Wa Baile தனிமைப்படுத்தப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்று கூறி கீழ் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தபோது, சுவிஸ் ஃபெடரல் உச்ச நீதிமன்றத்திற்கு அவர் சென்றார்.

உச்ச நீதிமன்றமோ, Wa Baile பொலிசாரின் பார்வையை தவிர்த்ததாலேயே பொலிசார் அவர் மீது சந்தேகப்பட்டு அவரை தடுத்து நிறுத்தியதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் அளித்த அறிக்கையையே இந்த வழக்கு அதிகம் சார்ந்துள்ளதாக தெரிவித்ததோடு, சூரிச் விமான நிலையம் ஏராளமானோர் கூடும் இடமாதலால் குற்றம் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதையும், அதையும் இந்த அழக்கில் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

சுவிஸ் சட்டப்படி, சரியான காரணம் ஏதாவது இருந்தால்தான் ஒருவரின் அடையாள அட்டையைக் கேட்க வேண்டும். தன்னைப் பொருத்தவரை அப்படி எந்தக் காரணமும் இல்லை என்பதால் Wa Baile இந்த பிரச்சினையை Strasbourgயிலுள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

பாகுபாடு காட்டப்படக்கூடாது என்று கூறும் சர்வதேச கொள்கைகளை பின்பற்றுவதில்லை என்றும், இது போன்ற விடயங்களில் சுவிஸ் நீதிமன்றங்கள் சரியான நீதி வழங்குவதில்லை என்றும் வாதங்கள் நடப்பில் இருக்கும் நிலையில், இவ்வழக்கில் அளிக்கப்பட இருக்கும் தீர்ப்பு இனப் பாகுபாடு பிரச்சினைக்கு நல்ல ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers