அவசியம் ஏற்பட்டாலொழிய இலங்கைக்கு செல்ல வேண்டாம்: சுவிஸ் வெளியுறவு அமைச்சகம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஈஸ்டர் அன்று இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சுவிஸ் வெளியுறவு அமைச்சகம், அவசியம் ஏற்பட்டாலொழிய இலங்கைக்கு செல்ல வேண்டாம் என தனது குடிமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இலங்கையில் பாதுகாப்புச்சூழல் எப்படி இருக்கிறதென்பது உறுதியாக தெரியவில்லை என்று கூறியுள்ள சுவிஸ் வெளியுறவு அமைச்சகம், சூழ்நிலை சரியாகும் வரை இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானது அல்ல என்று தெரிவித்துள்ளது.

சுவிஸ் பயண ஏற்பாட்டாளரான Hotelplanம், மே மாதம் 31ஆம் திகதி வரையிலான பயணத்திட்டங்களை எல்லாம் உடனடியாக ரத்து செய்ய முடிவு செய்துள்ளதோடு, அடுத்த அறிவிப்பு வெளியாகும்வரை இலங்கை பயணத்திற்கான முன்பதிவுகளை மேற்கொள்வதில்லையென்றும் அறிவித்துள்ளது.

இலங்கை குண்டு வெடிப்புகளில் உயிரிழந்துள்ளவர்களில் பெரும்பாலானோர் இலங்கையர்கள் என்றாலும், இரண்டு சுவிஸ் நாட்டவர்கள் உட்பட 40 வெளிநாட்டவர்களும் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப்பயணிகள். அவர்கள் காலை உணவு உண்பதற்கு ஆயத்தமாகும்போது, தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்காகவும் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காகவும் இரண்டு சுவிஸ் பொலிஸ் அதிகாரிகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்