சுவிஸில் அதிக கொரோனா இறப்பை எதிர்கொண்ட முதியோர் இல்லம்: வெளிவரும் தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் துர்காவ் மண்டலத்தில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் எண்ணிக்கை 39 என அதிகரித்துள்ள நிலையில், இங்குள்ள ஒரு முதியோர் இல்லம் கடும் சிக்கலை எதிர்கொள்கிறது.

துர்காவ் மண்டலத்தில் உள்ள Weinfelden முதியோர் இல்லத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 14 பேர் மரணமடைந்துள்ளனர்.

மேலும், 33 முதியவர்களுக்கு இதே இல்லத்தில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மட்டுமின்றி, 78 பேர் பாதுகாப்பு கருதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மண்டலம் மொத்தம் கொரோனாவுக்கு 39 பேர் மரணமடைந்துள்ள நிலையில், ஒரே ஒரு முதியோர் இல்லத்தில் மட்டும் 14 பேர் இறந்துள்ளது தற்போது அதிகாரிகள் மட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மட்டுமின்றி, முதியோர் இல்லத்தில் பணியாற்றும் சுமார் 60 ஊழியர்களை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் 27 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஊழியர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் எஞ்சிய முதியோர்களை பராமரிக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

தற்போதைய சூழலில் ஊழியர்கள் பற்றாக்குறை என்பது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள நிர்வாகிகள் தரப்பு, நகர நிர்வாகத்திடம் உதவி கோரியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் Weinfelden முதியோர் இல்ல நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளை அமுலுக்கு கொண்டுவந்துள்ளது.

சிறப்பு அனுமதி பெற்றவர்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்கவும் எஞ்சிய பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கவும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்