இதுவே கடைசி பயணம்! தந்தை, மகள் ஒன்றாக இருந்த நெகிழ்ச்சி நிமிடங்கள்

Report Print Raju Raju in பிரித்தானியா

தந்தையும், மகளும் ஒரே விமானத்தில் ஒன்றாக விமானிகளாக பணியாற்றிய நிலையில், பணி ஓய்வு பெற்ற தந்தை கடைசியாக மகளுடம் வேலை செய்த தருணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் மேற்கு சசுக்ஸ் கவுண்டியை சேர்ந்தவர் டேவிட் (64) இவர் கடந்த 1984-லிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் விமானியாக பணியாற்றி வருகிறார்.

இவர் மகள் கேட் உட்ரூப் (35). இவரும் சில வருடங்களுக்கு முன்னர் அதே நிறுவனத்தின் விமானத்தில் விமானியாக வேலைக்கு சேர்ந்தார்.

தந்தை மற்றும் மகள் இருவரும் ஒரே விமானத்தில், ஒரே நேரத்தில் பலசமயம் விமானிகளாக இணைந்து பணியாற்றியுள்ளார்கள்.

இந்நிலையில் டேவிட் நேற்று பணி ஓய்வு பெற்றார். கடைசியாக நேற்று நியூயோர்கிலிருந்து பிரித்தானியாவின் Heathrow விமான நிலையத்துக்கு குறித்த விமானத்தை தனது மகள் கேட்-யுடன் டேவிட் இயக்கி கொண்டு வந்தார்.

மகளுடன் கடைசி முறையாக டேவிட் இணைந்து பணிபுரிந்தது இருவருக்கும் நெகிழ்ச்சியான உணர்வை கொடுத்தது.

இது குறித்து டேவிட் கூறுகையில், இது ஒரு வித்தியாசமான உணர்வை எனக்கு தருகிறது. நான் என் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளேன்.

ஆனால் என் மகள் தனது பணியை சிறப்பாக தொடருவார். 12 வயதிலிருந்தே விமானி ஆக வேண்டும் என அவருக்கு ஆர்வம் இருந்தது.

பணியில் நானும் கேட்-டும் ஒன்றாக இருந்த போது தந்தை மகள் உறவு எங்களிடம் இருக்காது, நூறு சதவீதம் தொழில்முறை உறவு தான் இருந்தது என கூறியுள்ளார்.

கேட் கூறுகையில், தந்தையுடன் இணைந்து வேலை செய்தது நல்ல அனுபவம், அவருடன் பணி குறித்து ஆலோசித்தது மிக எளிதாக இருந்தது.

தந்தையுடன் இறுதியாக விமானத்தில் வேலை செய்தது அற்புதமான தருணம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers