பிரான்ஸ் வழியாக காரில் சென்று கொண்டிருந்த பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளின் காரில் அகதிகள் ஒளிந்திருந்த நிலையில், தற்போது அதன் வீடியோ வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் சிலர் கார் ஒன்றில், கடந்த வியாழக்கிழமை பிரான்சின் Vendée நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் A29 நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, அவர்கள் காரின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த பெட்டியில் ஏற்பட்ட சத்தம் காரண்மாக காரை நிறுத்தி பார்த்த போது, உள்ளே இரண்டு அகதிகள் ஒளிந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக செய்தி வெளியானது.
இந்நிலையில், தற்போது அந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
அதில், குறித்த நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி மேலே பார்க்கும் போது, அந்த பெட்டியில் இருந்து இரண்டு இளைஞர்கள் கீழே குதிப்பதை பார்க்க முடிகிறது.
அதன் பின் அவர்களிடம் சுற்றுலாப்பயணி ஒருவர் உங்களை பரிசோதிக்க வேண்டும், சட்டை மற்றும் பேண்ட் பையை காட்டுங்கள் என்று கூறுகிறார். அப்போது பேசிக் கொண்டே இருவரும் தப்பி ஓடுகின்றனர்.
மறைந்த அகதிகளில் ஒருவர் Eritrea மற்றொருவர் Guinea, இருவருக்குமே 16 வயது மதிக்கத்தக்க நபர் எனவும், தப்பி ஓடிய இவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும், காரில் வந்த சுற்றுலாப்பயணிகள் விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது, இவர்கள் பெட்டியின் உள்ளே ஒளிந்துள்ளனர். கார் வண்டி எண் பிரித்தானியா பதிவு எண்ணை கொண்டிருந்ததால், அவர்கள் பிரித்தானியாவிற்குள் நுழைந்துவிடலாம் என்ற திட்டத்துடன் காரில் ஏறியுள்ளனர்.
ஆனால் சிக்கிவிட்டனர். குறித்த காரில் பிரித்தானியாவை சேர்ந்த தம்பதி மற்றும் இரண்டு குழந்தைகள் இருந்ததாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.