பீர் வாங்க பணம் கேட்ட இளைஞர்.. அடுத்த சில மணிநேரங்களில் நடந்த ஆச்சரியம்! பின்னர் அவர் செய்த நெகிழ்ச்சி செயல்

Report Print Kabilan in அமெரிக்கா
226Shares

அமெரிக்காவில் பீர் வாங்க பொதுமக்களிடம் பணம் கேட்ட இளைஞருக்கு ஏராளமான அளவில் நிதி குவிந்ததைத் தொடர்ந்து, சிறுவர் மருத்துவமனைக்கு அதனை அவர் அளிப்பதாக அறிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த கார்சன் கிங் என்ற 24 வயது இளைஞர், சமீபத்தில் அயோவாவில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற்ற College Game Day என்ற கால்பந்து விளையாட்டு நிகழ்ச்சியைக் காண நண்பர்களுடன் சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் வரவேற்பு இருந்தது.

நிகழ்ச்சியின்போது கார்சன் தனது கையில் ஒரு பதாகையுடன் நின்றிருந்தார். அதில், ‘புஷ் லைட் பீர் வாங்க வேண்டும்’ என்று எழுதி, அதற்காக மக்கள் பணம் கொடுத்து உதவ வேண்டும் என தனது இணையப் பணப் பரிவர்த்தனை ஐ.டியையும் சேர்த்து எழுதியிருந்தார்.

அவரது இந்த குறும்புத்தனமான செயல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால், பெரும்பாலான மக்கள் உடனடியாக அவருக்கு பணம் அனுப்பத் தொடங்கினர். இதன் காரணமாக நிகழ்ச்சி ஒளிபரப்பான சில நிமிடங்களிலேயே, கார்சனின் வங்கிக்கணக்கிற்கு பணம் வரத் தொடங்கியது.

அடுத்த அரைமணி நேரத்தில் கார்சனுக்கு 400 டொலர்கள் வரை நன்கொடை குவிந்தது. அதன் பின்னரும் அவர் எதிர்பாராத அளவுக்கு நன்கொடை குவியத் தொடங்கியது. இதனால் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்த கார்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதில், அனைவரும் அனுப்பிய பணத்தில் ஒரு கேஸ் பீர் வாங்க தனக்கு தேவையான 15 டொலர்கள் பணத்தைத் தவிர, மற்ற பணத்தையெல்லாம் அப்பகுதியில் உள்ள சிறுவர் மருத்துவமனைக்கு நன்கொடையாக அளிப்பதாக கார்சன் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு பிறகு மேலும் நன்கொடை குவியத் தொடங்கியது.

இவ்வாறாக 67,000 டொலருக்கும் மேல் கார்சனுக்கு நன்கொடைகள் வந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், இந்த விடயம் புஷ் லைட் பீர் நிறுவனத்தின் கவனத்திற்கு சென்றது. அதனைத் தொடர்ந்து, குறித்த மருத்துவமனைக்கு கார்சன் நன்கொடை அளிக்கும் அதே தொகையை அளிப்பதாக, புஷ் லைட் நிறுவனம் அறிவித்தது.

இம்மாத இறுதி வரை நன்கொடைகளை அனுப்பலாம் என்று கார்சன் அறிவித்துள்ளதால், இந்த தொகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பேசிய கார்சன், ‘இப்படியெல்லாம் நடக்கும் என நான் நினைக்கவில்லை’ என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்