பெண்கள் போன்று வளர்ந்த மார்பகம்: இளைஞருக்கு 8 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்கும் பிரபல நிறுவனம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் இளைஞர் ஒருவருக்கு பெண்கள் போன்று மார்பகம் வளர்ந்த விவகாரத்தில் 8 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க பிரபல நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் குடியிருக்கும் 26 வயதான Nicholas Murray என்பவருக்கே பெண்கள் போன்ற மார்பகம் வளர்ந்துள்ளது. இவருக்கு ஆட்டிசம் தொடர்பான நோய் ஒன்று இருந்துள்ளது.

இது தொடர்பாக மருத்துவர் ஒருவரை அணுகிய இவர், குறித்த மருத்துவர் பரிந்துரைத்ததன் பேரில் கடந்த 2003 முதல் 2008 ஆம் ஆண்டு வரை ஜான்சன் & ஜான்சன் நிறுவன தயாரிப்பு மருந்தான Risperdal என்ற மருந்தை எடுத்துக் கொண்டுள்ளார்.

குறித்த மருந்தானது அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் கடந்த 1993 ஆம் ஆண்டில் இருந்தே அங்கீகரிக்கப்பட்டு, மருத்துவர்களால் பரவலாக பரிந்துரைக்கப்பட்டும் வருகிறது.

இந்த நிலையிலேயே இளைஞர் Nicholas Murray தமக்கு பெண்கள் போன்ற மார்பகம் வளர்வதை கண்டறிந்தார்.

இது குறித்த மருந்தின் தாக்கத்தால் ஏற்பட்டது என்பதை நீதிமன்றத்தில் நிறுவிய அவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் 1.75 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மேற்கொண்ட மேல்முறையீட்டில், அந்த இழப்பீடு தொகை 680,000 டொலர்கள் என குறைக்கப்பட்டது.

ஆனால் இளைஞர் Nicholas Murray தரப்பு அந்த தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்தது மட்டுமின்றி பொதுமக்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்தாமல் லாப நோக்கில் செயல்பட்டதாகவும் நிறுவியது.

இதனையடுத்து பிலடெல்பியா நீதிமன்றம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு 8 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், மீண்டும் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்