மருதாணி கையில சிவக்கலையா? இதை செஞ்சு பாருங்க!

Report Print Gokulan Gokulan in பெண்கள்

முன்பெல்லாம் பண்டிகைகளில்தான் மருதாணியை வாங்கி பாக்கு, சுண்ணாம்பு, மருந்தாணி இலையை அம்மியில் வைத்து அரைத்து இரவு படுக்கப்போகும்போது கையில் மருதாணி இலையை வட்டவட்டமாக கையில் இட்டு காலையில் எழுந்து பார்த்தால் கை சிவந்து அழகாக இருக்கும்.

இப்போதெல்லாம் அப்படி இல்லை. விதவிதமான மெஹந்தி வந்துவிட்டது. கடைக்கு போனால் டக்குன்னு மெஹந்தியை வாங்கி வந்து உடனே வைத்துக் கொள்ளலாம். நமக்கு ஏற்ற டிசைன்களிலும் கையில் போட்டு அழகுப்படுத்திக் கொள்ளலாம்.

திருமணப் பெண் நகை, ஆடை எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அந்த அளவுக்கு கை மற்றும் கால்களுக்கு மருதாணி டிசைன்களை இட்டுக் கொள்வதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

மணப்பெண்ணுக்கு மருதாணி இட்டு அழகுபடுத்துவதும் தனிச்சடங்காக ஆட்டம்-பாட்டத்துடன் கொண்டாடப்படுகிறது. திருமணம் நடைபெறுவதற்கு முந்தைய தினம் இந்த கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

முஸ்லிம் சமூகத்தில், இந்த விழாவின் போது மணப்பெண்ணை நடுவில் நிறுத்தி தோழிகள் சூழ்ந்து நின்று அவருக்கு மருதாணி இட்டு, பாட்டுப்பாடி, நடனம் ஆடி மகிழ்வார்கள். இப்போது அனைத்து திருமணங்களிலும் இத்தகைய சடங்குகள், உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

மருதாணி நன்றாக சிவக்க வில்லையென்றால் சிலருக்கு கவலை வந்துவிடும்.

அப்படி கவலை வேண்டாம். மருதாணி நன்றாக சிவக்க டிப்ஸ்:

  • யூகலிப்டஸ் தைலம் சிறிதளவை கையில் தடவி பின்பு மருதாணி இட்டுக் கொண்டால் கையில் மருதாணி சிவந்த நிறமாக இருக்கும்.
  • மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து, மருதாணி இட்ட கைகளை லேசாக காட்டினால் மருதாணி சிவக்கும்.
  • கிராம்பு போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் கை காட்டி ஆவிபிடித்தால் மருதாணி நன்றாக சிவக்கும்.
  • சர்க்கரை, எலுமிச்சை கலந்த தண்ணீரில் கையை நனைத்தால் மருதாணி சிவந்து கைகளை அழகுப்படுத்தும்.
  • மருதாணி இட்டபின் குறைந்தபட்சம் ஒன்றரை மணிநேரமாவது அதை கலைக்காமல் அப்படியே வைத்திருக்க வேண்டும். ஒருநாள் முழுவதும் அதை மாற்றாமல் வைத்திருப்பது கூடுதல் நிறம் கிடைக்கும்.
  • மருதாணி காய்ந்தபின் குறைந்தபட்சம் 6 மணி நேரம் வரை தண்ணீரில் கையை நனைக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.
  • மருதாணி போட்டவுடன் தூங்கச் சென்றால் நமது உடைகளில் பட்டு கறையாகிவிடும். இதை தவிர்க்க மருதாணி இட்ட கைகளில் கையுறையை போட்டுக் கொள்ளலாம்.
  • மருதாணியின் நிறம் மங்கத் தொடங்கும்போது, சில இடங்களில் அழிந்தும், சில இடங்களில் அடர்த்தியான நிறத்துடனும் காணப்படும். இது பார்ப்பதற்கு அழகாக இருக்காது. இவ்வாறான நேரத்தில், உடல் ஒப்பனை மருந்து (காஸ்மடிக் பாடி பிளீச்) மூலம் கைகளை கழுவி மருதாணியின் நிறத்தை முற்றிலும் அழித்துவிடலாம்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்