இலங்கையில் மரண தண்டனை மீதான தடை நீக்கம்?: கவலை தெரிவித்துள்ள கனடா!

Report Print Balamanuvelan in கனடா

இலங்கையில் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இலங்கை மரண தண்டனை மீதான தடையை நீக்க முடிவு செய்துள்ளது கவலையை அளிப்பதாக கனடா தெரிவித்துள்ளது.

கொழும்புவிலுள்ள இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான கனேடிய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ' நாங்கள் அனைத்து வகையிலும் மரண தண்டனையை வன்மையாகவும் தெளிவாகவும் எதிர்க்கிறோம்.

இவ்வகை தண்டனை மனித கண்ணியத்துக்கு சற்றும் பொருத்தமானது அல்ல, அத்துடன், நீதிக்கு மீள இயலா களங்கத்தை அது ஏற்படுத்தி விடக்கூடியது. பிழை ஏற்படாத நீதி அமைப்பே கிடையாது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'சட்ட விரோத போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அவசியம்தான், ஆனால், மரண தண்டனையால் போதைக் கடத்தல் குற்றம் குறையும் என்பதற்கு ஆதாரம் இல்லை.

மேலும், மரண தண்டனையை மீண்டும் செயல்படுத்துதல் உலகின் கவனத்தை இலங்கையை நோக்கி ஈர்ப்பதோடு, சுற்றுலாப்பயணிகளையும் முதலீட்டாளர்களையும் வரவேற்கும் அமைதியான நாடு என்ற தோற்றத்தை கட்டி எழுப்புவதற்கு தடையாகவும் இருக்கும்.

இலங்கை நாட்டவர்கள் மற்றும் இலங்கையின் நண்பர்கள் பலருடன் நாங்களும் இணைந்து மரண தண்டனை மீதான தடையை தொடர வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்துகிறோம்' என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்