விஜய் மல்லையாவை நாடு கடத்தும் இறுதி விசாரணை இன்று தொடங்குகிறது

Report Print Gokulan Gokulan in தொழிலதிபர்

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கின் இறுதி விசாரணை இன்று தொடங்குகிறது.

இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி, பின் செலுத்த முடியாமல் லண்டனுக்கு சென்று தலைமறைவானவர் தொழிலதிபர் விஜய் மல்லையா.

இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில் இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை திருப்பி அனுப்பும்படி இங்கிலாந்து அரசிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி அவரை ஸ்கொட்லாந்து பொலிசார் கைது செய்த சிறிது நேரத்தில் மல்லையா தரப்பில் ஜாமீன் பெறப்பட்டது. பின்னர் இந்திய அரசு சார்பில் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரி லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதன்படி அந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று(4/12/2017) தொடங்கி வருகின்ற 14-ஆம் திகதி வரை தொடர்ந்து நடக்கவுள்ளது.

தலைமை மாஜிஸ்திரேட்டு எம்மா லூயிஸ் அர்பத்னோட் முன்னிலையில் நடைபெறும் இந்த வழக்கு விசாரணைக்காக விஜய் மல்லையா நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இதுகுறித்து விஜய் மல்லையா கூறுகையில்,“எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை. கற்பனையானது மற்றும் அடிப்படையற்றது. சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதே ஆதாரமாகும்.” என கூறியுள்ளார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்