ஒரு தமிழனை நோக்கி தேடி வந்த பெருங்கூட்டம்! வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்த சோதனை

Report Print Raana in நிகழ்வுகள்
731Shares

தமிழர்கள் உலகெங்கும் வாழ்ந்து வருகிறார்கள். நம் முன்னோர்கள் அறிவை பட்டை தீட்டி ஞானத்தால் பல விசயங்களை ஆராய்ந்து கண்டுபிடித்து சமூகத்திற்கு இன்றும் பயன்படும் கண்டுபிடிப்புகளை கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். அதில் ஒன்று தான் பூட்டு. பூட்டு என்றதும் நம் நினைவிற்கு உடனே வருவது திண்டுக்கல் தான். திண்டுக்கல் பூட்டை திருடனாலும் திறக்க முடியாது என்ற சொல்லாடலும் இருக்கிறது.

தமிழ்நாட்டின் ஒரு மாவட்டமான திண்டுக்கல்லில் வாழ்ந்த பரட்டை ஆச்சாரி என்பவர் 1930 ல் மாங்காய் வடிவத்தில் ஒரு பூட்டினை தயார் செய்தார். அத்துடன் சதுரவடிவத்தில் ஒரு பூட்டையும் உருவாக்கினார்.

இதை கடைகளில் விற்பனைக்கு கொடுத்த சில நாட்களில் பலரும் அந்த ஆச்சாரியை தேடி வந்து பெருமளவிலான பூட்டுகளை செய்துகொடுக்க ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள்.

இதற்காக அவர் ஒரு பெரும் பட்டறையில் பல தொழிலாளர்களை பூட்டு உற்பத்தியில் ஈடுபடுத்தியுள்ளார். வியாபாரமும் பெருகியது. அவரிடம் தொழிலை கற்றவர்கள் பிரிந்து சென்று தனியே தொழில் தொடங்கிவிட்டனர்.

பூட்டு செய்ய தேவையான இரும்பு திண்டுக்கல்லில் அதிகமாக கிடைத்துள்ளது. இதனால் இந்த தொழில் வேகமாக வளர்ச்சியடைந்து வந்தது. 1945 ல் வெளியூர்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் என திண்டுக்கல் பூட்டு பெரும் வரவேற்பை பெற்றது.

ஒரு படித்த பொறியாளர் செய்ய வேண்டிய விசயத்தை படிக்காத அந்த தமிழரே செய்ததை பார்த்து பலரும் அவரை பாராட்டினர். சுதந்திரத்திற்கு முன்பே இக்கண்டுபிடிப்பு புகழ்பெற்றது. லீவர் என்ற புதுநுட்பத்தை பூட்டில் கையாண்டதோடு டிலோ பூட்டு, பெல் பூட்டி, லண்டன் பூட்டு என புதுவகைகளை உருவாக்கினர்.

2000க்கும் அதிகமானோர் இந்த தொழிலில் ஈடுபட பின் 1957 ல் திண்டுக்கல் பூட்டு தொழிலாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. பின் உத்திர பிரதேசத்தில் இருந்து வந்த அலிகார் பூட்டு திண்டுக்கல் பூட்டு உற்பத்தியை மிகவும் பாதித்தது. குறைந்த எடை, மலிவான விலை, அழகான தோற்றம் என இயந்திரத்தால் செய்யப்பட்ட அந்த அலிகார் பூட்டுக்களால் திண்டுக்கல் பூட்டை உற்பத்தி செய்வோரின் நிலை மோசமாக போனது.

தமிழரின் பாரம்பரியமான அந்த திண்டுக்கல் பூட்டை யாராலும் திறக்க முடியவில்லை என அன்றே ஆங்கிலேயனும் பார்த்து அசந்து போனானாம். இப்படியான இந்த தொழில் இன்னும் நலிவடைந்த நிலையில் இருக்கிறது என்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.

அதே வேளையில் திருப்பதி தேவஸ்தானத்தில் கருவறை, பழநி முருகன் கோயில் மூலஸ்தானம், திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோயில், திருவண்ணாமலை, சிதம்பரம் நடராஜர் கோயில் உட்பட பல பிரசித்தி பெற்ற கோயில் கதவுகளில், திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய பூட்டுகள்தான் பொருத்தப்பட்டு உள்ளன.

மலேசியா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து என்று உலக அளவில் உள்ள கோயில்களுக்கும் பூட்டு செய்து அனுப்பி வைக்கின்றனர். நான்கு பேர், நான்கு சாவிகளுடன் வந்து திறக்கக் கூடிய பிரமாண்ட பூட்டுக்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் விலை ரூ.50 ஆயிரம் முதல் ஒன்றே கால் லட்சம் வரை உள்ளது என்கிறார்கள் பூட்டு உற்பத்தியாளர்கள்.

GST வரி, இயந்திரமயமாதல் என பல விசயங்களால் திண்டுக்கல் பூட்டு தொழில் குடிசை தொழிலாக மாறியுள்ளது வேதனையான விசயம். வங்கிகளில் இந்த தொழிலாளர்களுக்கு லோன் கூட வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்