நான் புடினுக்கு சமமானவன்: தற்பெருமையடித்துக் கொண்ட மேக்ரான்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

சமீபத்தில் பங்குபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் தானும் ரஷ்ய அதிபர் புடினுக்கு சமமானவன்தான் என்றும் இதை புடினுக்கு தெரியப்படுத்துவதற்காகத்தான் சிரியா மீது வான்வழித்தாக்குதல் நிகழ்த்தியதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தற்பெருமையடித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவு பெறவிருப்பதையொட்டி பேட்டி ஒன்றை அளித்த இமானுவல் மேக்ரான் தற்பெருமையடித்துக்கொள்ளும் வகையில் சில விடயங்களைக் கூறினார்.

“நான் புடினுக்கு சமமானவன், இது புடினுக்கே தெரியும், நாங்களும் சிரிய தாக்குதலில் பங்கு பெற்றுள்ளோம் என்பதை புடினுக்கு தெரியப்படுத்துவதற்காகவே சிரியா மீது தாக்குதல் நிகழ்த்த முடிவு செய்தேன்” என்று கூறியுள்ள மேக்ரான், அமெரிக்கப்படைகள் சிரியாவில் இருப்பது அவசியம் எனவும் கூட்டுப்படைகள் ரசாயன ஆயுதங்களுடன் தொடர்புடைய இடங்களின்மீது மட்டுமே தாக்குதல் நடத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை தான் சம்மதிக்கச் செய்ததாகவும் கூறியிருந்தார்.

GETTY

ஆனால் அவர் பேட்டியளித்த கொஞ்ச நேரத்திற்குள்ளேயே அவர் சொன்னதற்கு மாறாக டிரம்ப் தனது படைகள் முடிந்தவரை விரைவாக நாடு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டார்.

எங்கள் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் டிரம்ப் தனது படைகள் முடிந்தவரை விரைவாக நாடு திரும்ப வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்தார்.

இதனால் சற்று பின்வாங்கியமேக்ரான் அமெரிக்காவோ பிரான்ஸோ நீண்ட நாட்களுக்கு சிரியாவில் ராணுவத்தை வைத்திருக்காது என்று தான் கூறவில்லை என்றார்.

அதற்கு பதிலாக சிரியாவைப் பொருத்தவரை தங்கள் நோக்கம் ஐ.எஸ் க்கு எதிரான போர்தான் என்றார் அவர்.

ஏற்கனவே பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் ஒப்புதல் பெறாமல் சிரியா மீது தாக்குதல் நிகழ்த்தியதற்காகவும் பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி அமெரிக்காவின் தலைமையில் தாக்குதல் நிகழ்த்தியதற்காகவும் மேக்ரானை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் வரும் மே மாதம் St. Petersburgஇல் நடைபெற இருக்கும் சர்வதேச பொருளாதார மாநாட்டின்போது புடினும் மேக்ரானும் சந்தித்துக்கொள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

மேலும் பேச்சுவார்த்தை மூலம் பிரசினைகளைத் தீர்க்க விரும்பும் மேக்ரானின் அணுகுமுறையை ரஷ்யா வரவேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

GETTY

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்