பிரான்ஸ் முழுவதுமே ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் ஓய்வூதிய திட்டங்களில் செய்யப்படும் சீர்திருத்தங்களை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, தன் பங்குக்கு பிரென்சு ஸ்பைடர்மேனும் கட்டிடம் ஒன்றின் மேல் ஏறி தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
கயிறுகள், உபகரணங்கள் எவற்றின் உதவியுமின்றி, உலகின் மிக உயரமான கட்டிடங்களில் கூட சர்வ சாதாரணமாக ஏறுவதால் பிரெஞ்சு ஸ்பைடர்மேன் என்று அழைக்கப்படும் Alain Robert, பிரான்சில் ஓய்வூதிய திட்டங்களில் செய்யப்படும் சீர்திருத்தங்களுக்கு தனது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக கட்டிடம் ஒன்றில் ஏறினார்.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகள், வேலை பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் வேலை செய்கிறார்கள் மக்கள். அவர்கள் கௌரவத்துடன் வாழ்க்கை நடத்தவேண்டும் என்று விரும்புகிறோம் என்கிறார் அவர்.
வழக்கம் போல கட்டிடம் ஒன்றில் எந்த உபகரணங்களின் உதவியும் இன்றி 52 நிமிடங்களில் ஏறிய அவரை கைது செய்ய, வழக்கம் போல பொலிசார் காத்திருந்தனர்.

எனக்கு இப்போது 57 வயதாகிறது, 20 வருடங்களுக்கு முன் இருந்த உடற்கட்டுடன் நான் இல்லை.
எனக்கு தெரிந்த ஒரே வேலை கட்டிடங்களில் ஏறுவதுதான். எனக்கும் இப்போது கிட்டத்தட்ட ஓய்வு பெறும் வயதாகிறது.
அப்படியானால், நான் 64 அல்லது 67 வயதுவரை கூட கட்டிடங்களில் ஏறிக்கொண்டே இருக்கவேண்டுமா என்று கேள்வி எழுப்புகிறார் Robert.
மேக்ரானின் புதிய ஓய்வூதிய திட்டங்களை எதிர்த்து, டிசம்பர் மாதம் 5ஆம் திகதி துவங்கி, பணியாளர் யூனியன்கள் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த சீர்திருத்தங்களைப் பொருத்தவரை, அதிக காலம் வேலை செய்யுங்கள், கொஞ்சம் ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அவர்கள் கூருவதை நிறுத்தவேண்டும் என்கிறார் அவர்.
அவரது வார்த்தைகள், பிரான்ஸ் முழுவதும் இந்த புதிய ஓய்வூதிய சீர்திருத்தங்களை நிறுத்தவேண்டும் என்று கூறும் யூனியன்களின் குரலைத்தான் அப்படியே பிரதிபலிக்கின்றன.