ஜேர்மனியில் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடாத பெற்றோருக்கு தண்டனை: என்ன தண்டனை தெரியுமா?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

தங்கள் பிள்ளைகளுக்கு அம்மை நோய்க்கான தடுப்பூசி போடாத பிள்ளைகளின் பெற்றோருக்கு கடுமையான அபராதம் விதிக்க ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் முடிவு செய்துள்ளார்.

ஜேர்மனியில் மண்ணன் அல்லது மணல்வாரி எனப்படும் measles நோய் மீண்டும் அதிகம் பரவலாம் என்னும் அச்சம் உருவாகியுள்ள நிலையில், அதற்கான தடுப்பூசி போடாத பள்ளி செல்லும் வயதுடைய பிள்ளைகளின் பெற்றோருக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் முன்வைத்துள்ளார்.

ஜேர்மன் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சுகாதாரத்துறை அமைச்சர் Jens Spahn, தங்கள் பிள்ளைகளுக்கு மணல்வாரி நோய்க்கு தடுப்பூசி போட்டதை நிரூபிக்க முடியாத பெற்றோருக்கு 2,500 யூரோக்கள் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்றார்.

அதேபோல் தடுப்பூசி போடாத பிள்ளைகள் பகல் நேர குழந்தைகள் காப்பகங்களிலும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அபாயத்திலிருக்கும் மற்ற குழந்தைகளின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியைப் பொருத்தவரையில், தடுப்பூசி போன்ற கட்டாய மருத்துவ செயல்முறைகள் அரசியல் ரீதியில் மிகவும் முக்கியமான விடயங்கள் என்பதால், சட்டசபையில் விவாதிக்கப்படவிருக்கும் Spahnஇன் திட்டம் நிறைவேற்றப்படுமா என்பது உறுதியாக தெரியவில்லை.

ஆனால், கட்டுப்பாட்டில் இருப்பதாக ஒரு காலத்தில் கருதப்பட்ட மணல்வாரி நோய் மீண்டும் பரவலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், நிபுணர்கள் தடுப்பூசி திட்டத்தில் மீண்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளதோடு, ஜேர்மன் மருத்துவ கழகத்தின் தலைவர், Spahnஇன் திட்டத்தை வரவேற்றுள்ளார்.

ஜேர்மனியில் 2019ஆம் ஆண்டின் முதல் 10 வாரங்களுக்குள்ளாகவே, 203 பேர் மணல்வாரி அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது 2017 ஐ விட குறைவு என்றாலும், 2018ஐ விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொகையில் 95 சதவிகிதத்தினர் தடுப்பூசி போட்டிருந்தால் மணல்வாரி அம்மை நோய் பரவ முடியாது என்றும் நன்றாக கட்டுப்படுத்தப்பட முடியும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers