சட்டசபையில் மன்னிப்பு கேட்ட ஸ்டாலின்!

Report Print Arbin Arbin in இந்தியா
சட்டசபையில் மன்னிப்பு கேட்ட ஸ்டாலின்!

திமுக உறுப்பினர்கள் சிலரின் நடவடிக்கையால் வெட்கப்படுகிறேன் என பேசிய ஸ்டாலின் மன்னிப்பு கூட கேட்க கடமை பட்டிருக்கிறேன் என தெரிவித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பட்ஜெட் கடந்த ஜூலை 21ம் திகதி தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, அரசுத் துறைகளின் மீதான மானியக் கோரிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது.

அப்போது கைத்தறித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று திருவெறும்பூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதன்முறையாக உரையாற்றினார்.

அப்போது, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அடிக்கடி குறுக்கிட்டார். ஓ.எஸ்.மணியனின் குறுக்கீட்டிற்கு திமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து சபாநாயகருக்கு எதிராகவும் ஓ.எஸ்.மணியனுக்கு எதிராகவும் கடும் முழக்கங்களை எழுப்பினர்.

ஒரு கட்டத்தில் ஆவேசமான சபாநாயகர், இதற்கு எதிர்கட்சி தலைவரும், துணை தலைவரும் என்ன சொல்ல போகிறீர்கள் என ஸ்டாலினை பார்த்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தாம் ஏற்கனவே சொன்னது போல எதிரி கட்சியாக இல்லாமல் எதிர்கட்சியாக மட்டுமே செயல்பட்டு வருவதாக சுட்டிகாட்டினார்.

அந்த உறுதியை மீண்டும் அளிப்பதாகவும் கூறினார். மேலும் சில நேரங்களில் திமுக உறுப்பினர்களின் சுயமரியாதைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அதிமுக உறுப்பினர்கள் கருத்துக்களை தெரிவிப்பதாக ஸ்டாலின் வேதனை தெரிவித்தார்.

சில நேரங்களில் தங்களுடைய மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கும் நேரங்களில் எங்களது உறுப்பினர்கள் சில கருத்துக்களை தெரிவிக்க முன் வருகிறார்கள். அப்போது நீங்கள் அனுமதிக்காததால் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் தவறுதலாக கூட பேசியிருக்கலாம்.

சில திமுக உறுப்பினர்களின் இந்த நடவடிக்கையால் நான் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன், இன்னும் சொல்லப்போனால் மன்னிப்பு கேட்டு கொள்ளவும் காத்திருக்கிறேன் என வெளிப்படையாக கூறினார். இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments