தமிழகத்தில் ஆட்சி கவிழுமா?

Report Print Deepthi Deepthi in இந்தியா
359Shares
359Shares
lankasrimarket.com

தி.மு.க. சார்பில், தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன், சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற உறுப்பிர் திருச்சி சிவா ஆகியோர், மும்பை சென்று ஆளுநரிடம் நேரில் வழங்கியுள்ளனர்.

திமுக அளித்துள்ள மனுவில்,

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, மறைந்ததையொட்டி அந்தத் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டு, அரசியல்கட்சிகள் பிரசாரம் நடைபெற்றது.

அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டு, அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா என்று திரு.ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க அம்மா என டி.டி.வி.தினகரன் தலைமையில் ஒரு அணியும் தேர்தலில் தங்களது வேட்பாளர்களை நிறுத்தின. அ.தி.மு.க அம்மா அணிக்கு ‘தொப்பி’சின்னமும், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணிக்கு, ‘மின் கம்பம்’ சின்னமும் ஒதுக்கப்பட்டது.

அ.தி.மு.க. அம்மா அணியின் சார்பில் டி.டி.வி. தினகரன் நிறுத்தப்பட்டு, வாக்காளர்களுக்கு அவரது ஆதரவாளர்கள் பணப்பட்டுவாடா செய்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அமைச்சர்களோடு சேர்ந்து, குறிப்பாக விஜயபாஸ்கருடன் கைகோர்த்துக் கொண்டு, தொகுதியிலுள்ள ஒவ்வொரு வாக்காளரின் வாக்குகளையும் பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் பொருட்டு, ஊழல் செய்த பணத்திலிருந்து 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது, சதிக் குற்றமாகும். மேலும் அரசு இயந்திரங்களை பயன்படுத்தி, பணம் மட்டுமல்லாது பல்வேறு பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது கண்டறியப்பட்டது.

விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் கடந்த 7-ம் தேதி நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திரு.விஜயபாஸ்கரின் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின்போது ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்குக்கு பணம் அளித்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டவர்கள் பட்டியலில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், திண்டுக்கல் சி.சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், செல்லூர் கே.ராஜூ, எம்.சி.சம்பத், வி.எம்.ராஜலட்சுமி, வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்தியலிங்கம் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை முதலமைச்சரும், அவரது அமைச்சரவை சகாக்களும் திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அபாரதத்துடன் கூடிய ஒரு வருட சிறை தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே, ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற வரலாறு காணாத தேர்தல் முறைகேடுகள் மற்றும் வருமான வரித்துறையினரின் சோதனையில் கிடைத்த முக்கிய தகவல்களை அடிப்படையாக வைத்து, ஆர்.கே நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

எனவே, தேர்தல் பார்வையாளர்களின் அறிக்கை, விஜயபாஸ்கர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், வாக்காளர்களுக்கு பணம் வழங்கி குற்றம் புரிந்த முதல்வர் மற்றும் அமைச்சர்களை உடனடியாக ராஜினாமா செய்ய ஆளுநர் உத்தரவிட வேண்டும். அவர்கள் ராஜினாமா செய்யத்தவறும் பட்சத்தில், அப்பதவிகளை நிர்வகிக்கும் உரிமையை இழந்த அவர்கள் அனைவரையும் ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

முதல்வர் மற்றும் தமிழக அமைச்சர்களின் இந்த செயல் ஜனநாயகத்தை வேரறுக்கும் செயல் மட்டுமல்ல, தேர்தல் செயல்பாடுகளில் இத்தகைய நிலை வெளிப்படையாக அதிகரித்து வருகிறது என்பதற்கும் உதாரணமாகும்.

மேலும், ஜனநாயகம் மற்றும் மாநில நலன் கருதி, அ.தி.மு.க. அரசில் நடந்துள்ள இந்த மிகப்பெரிய ஊழல் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு மத்திய அரசுக்கு ஆளுநர் பரிந்துரை செய்ய வேண்டும்" என்று மு.க.ஸ்டாலின் அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆளுநரிடம் இந்த மனுவை அளித்த தி.மு.க நிர்வாகிகள், ஆளுநர் எங்கள் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என்று தெரிவித்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments