வாட்ஸ் அப்பில் பகிரப்பட்ட அரை நிர்வாண புகைப்படம்: உண்மையை மறைத்த பொலிஸ்?

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பட்டியலனி சமூகத்தை சேர்ந்தவர்களை அரைநிர்வாணப்படுத்தி உயர் சாதியினர் மரத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வாட்ஸ் அப் குழுக்களுக்கு கடந்த ஜனவரி மாதம் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை அரை நிர்வாணத்துடன் மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலர், மரத்தில் கட்டிவைத்து சாதியக் கொடுமை செய்வதாக தகவல் பரவியது.

இந்த சம்பவம் தமிழகத்தின் விராலிமலை ஒன்றியம், கிளிக்குடி பயஞ்சாத்துக்குட்பட்ட வலையப்பட்டி என்ற கிராமத்தில் நடந்ததாக கூறப்பட்டிருந்தது.

அதுகுறித்து விசாரித்த போது அது போன்ற சம்பவம் ஒன்று நடக்கவே இல்லை எனவும், புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி அந்த ஐந்து இளைஞர்களும் செல்போன் திருடர்கள். வன்கொடுமை சம்பவம் எதுவும் நடக்கவில்லை எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் அந்த ஐந்து இளைஞர்களும் நேற்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்துப் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், நாங்கள் ஐந்து பேரும் கடந்த மாதம் வலையப்பட்டி கிராமத்தில் நடந்த அன்னதான விழாவுக்குச் சென்றிருந்தோம்.

அப்போது நாங்கள் அங்கு வேட்டியை மடித்து கட்டியிருந்ததைப் பார்த்த உயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் எங்களின் ஜாதிப் பெயரை சொல்லி திட்டினர், அசிங்கப்படுத்தினர். அதுமட்டுமின்றி எங்கள் ஐந்து பேரையும் கட்டிவைத்து கடுமையாகத் தாக்கினார்கள்.

உள்ளூர் என்பதால், எங்களால் எதுவும் பேச முடியவில்லை, அதை எல்லாம் சகித்துக் கொண்டோம். அங்கிருந்து வந்த பின்பு எங்கள் கிராமத்தினரிடம் கூறியதால், கிராமத்தினரும், நாங்களும் அங்கு அது குறித்து விளக்கம் கேட்க சென்றோம்.

அப்போதும் அவர்கள் எங்களை கேவலப்படுத்தியதுடன், ஊர்ப் பொதுவெளியில் உள்ள ஆலமரத்தடியில் எங்களை அரை நிர்வாணப்படுத்தி, கைகளைப் பின்புறம் கட்டி மண்டியிட வைத்து, தொடர்ந்து ஜாதிப் பெயரைச் சொல்லித் அடித்தார்கள்.

இதுகுறித்து பொலிசாரிடம் பல முறை புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க வந்ததாக கூறியுள்ளனர்.

மேலும் இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் கூறுகையில், இதுகுறித்து விசாரித்த போது, அவர்கள் செல்போன் திருடியதன் காரணமாகவே அந்த கிராமத்தினர் அடித்ததாகவும், இதை அறிந்து பொலிசார் அங்கு விரைந்து அவர்களை மீட்டதாகவும் கூறுகின்றனர்.

ஆனால் தற்போது அந்த இளைஞர்கள் நேற்று சாதி வன்கொடுமை செய்ததாக கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள், இதனால் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளும் படி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதை அறிந்த மனித உரிமை ஆர்வலர்கள் பொலிசார் திட்டமிட்டே இந்த சம்பவத்தை மறைத்துவிட்டதாக கூறுகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்