தலை தனியாக உடல் தனியாக கிடந்த நபர்: அனாதையான மனைவி, குழந்தைகள்.. வெளியான பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் தையல்காரர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அண்ணன்- தம்பியை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் களக்காட்டின் பச்சையாறு கரையில் நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார்

அங்கு உடல் தனியாகவும், சற்று தூரத்தில் தலை தனியாகவும் ரத்த வெள்ளத்தில் கிடந்தது.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றி விசாரணையில் இறங்கினர்.

முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் அதே ஊரைச் சேர்ந்த ஆல்பர்ட் செல்வகுமார் (40) என்பதும், தையல் கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

நேற்று முன்தினம் மாலை அதே ஊரைச் சேர்ந்த மாயக்கண்ணன் என்பவரிடம், மணி என்பவரின் மகன்கள் பொன் இசக்கி, அவருடைய தம்பி இசக்கிமுத்து ஆகிய இருவரும் குடிபோதையில் தகராறு செய்தனர்.

அப்போது அங்கு வந்த ஆல்பர்ட் செல்வகுமார் தட்டிக் கேட்டு தகராறை விலக்கி விட்டுள்ளார். பின்னர் இரவில் ஆல்பர்ட் செல்வகுமாரை, அண்ணன்-தம்பி இருவரும் மோட்டார்சைக்கிளில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஆல்பர்ட் செல்வகுமார் வீடு திரும்பி வரவில்லை.

இந்நிலையில் நேற்று காலை பச்சையாறு கரையில் ஆல்பர்ட் செல்வகுமார் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார். எனவே இச்சம்பவத்தில் அண்ணன், தம்பி இருவரும் ஈடுபட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து தலைமறைவாக உள்ள பொன் இசக்கி மற்றும் இசக்கிமுத்துவை பொலிசார் தேடி வருகிறார்கள்.

கொல்லப்பட்ட ஆல்பர்ட் செல்வகுமாருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers