மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாததால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட பெற்றோர்

Report Print Vijay Amburore in இந்தியா
1204Shares

நாகப்பட்டினத்தில் மகனின் பள்ளிக்கட்டணத்திற்கு பணம் கிடைக்கவில்லை என்கிற காரணத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினத்தில் நகைக்கடை தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் செந்தில்குமார் (35). இவருக்கு லட்சுமி (30) என்கிற மனைவியும், ஜெகதீஸ்வரன் (11) என்கிற மகனும் உள்ளனர்.

அருகாமையில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் ஜெகதீஸ்வரனுக்கு பள்ளி ஆரம்பித்து 10 நாட்களாகியும் இன்னும் கட்டணம் செலுத்தவில்லை. இதனால் ஜெகதீஸ்வரன் தினமும் தன்னுடைய பெற்றோரிடம் பணம் கேட்டு வந்துள்ளான்.

நகைக்கடையில் போதிய வருமானம் இல்லாத காரணத்தாலும், குடும்ப செலவிற்காக பலரிடமும் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத காரணத்தாலும் செந்தில்குமார் மனவேதனை அடைந்துள்ளார்.

படித்து பொலிஸ் வேலையில் சேர வேண்டும் என்கிற மகனின் ஆசையை கூட நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளோம் என மனைவியிடம் புலம்பியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று மதியம் செந்தில்குமார் வேலைக்கு வராத காரணத்தால் கடையின் உரிமையாளர் ஒரு சிறுவனை வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

அங்கு மூன்று பெரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டு கிடப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்த சிறுவன் கடையின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளான்.

பின்னர் இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார் மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாத காரணத்தால் கடைசி நேரத்தில் பொலிஸ் உடை அணிவித்து மூன்று பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த சம்பவம் அறிந்து குவிந்த அக்கம்பக்கத்தினர், தாயின் மடியிலே மகன் இறந்துகிடப்பதை பார்த்து கதறி அழுதுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்