20 வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தின் சென்னையில் இருந்து கடத்தப்பட்ட சிறுவன் மீண்டும் தனது பெற்றோருடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வரும் நாகேஷ்வர் ராவ் மற்றும் சிவகாமி தம்பதிகளுக்கு சுபாஷ் என்ற மகன் உள்ளார்.
இவர் 3 வயதாக இருக்கும்போது மர்ம கும்பல் மூலம் கடத்தப்பட்டு, மலேசியன் சமூக சேவை (எம்.எஸ்.எஸ்) என்ற நிறுவனத்திடம் சட்டவிரோதமாக விற்கப்பட்டார்.
குறித்த நிறுவனமானது சட்டவிரோதமாக குழந்தைகளை தத்தெடுத்து அவர்களை அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள குழந்தையில்லா தம்பதிகளுக்கு விற்றுவருவதாக கூறப்படுகிறது.
மலேசிய நிறுவனத்தால் அவினாஷ் என்ற பெயரில் விற்கப்பட்ட சிறுவன் சுபாஷ் அமெரிக்க தம்பதியினரிடம் வளர்ந்துள்ளார்.
இதேவேளை மாயமான மகன் தொடர்பில் நாகேஷ்வர ராவு தொடர்ந்த வழக்கில், மலேசிய நிறுவனம் தொடர்பில் அம்பலமானதுடன்,
அந்த நிறுவனத்தின் மூலம் நடைபெற்ற விசாரணையில் கடத்தப்பட்ட சிறுவன் சுபாஷின் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால் அதற்குள் 20 ஆண்டுகள் ஓடிவிட்டன. இருப்பினும் கடத்தப்பட்ட தனது மகனுடன் சேர்வோம் என நம்பிக்கையுடன் நாகேஷ்வர ராவு குடும்பத்தினர் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் சுபாஷின் சகோதரி சரளாவிடம் அந்த தொலைபேசி எண்கள் கிடைத்துள்ளது. இதையடுத்து வாட்ஸ் அப் மூலம், சுபாஷை தொடர்பு கொண்டுள்ளனர்.
அவரிடம் பேசி உண்மையை புரிய வைத்துள்ளனர். அமெரிக்க தம்பதியினரிடம் வளர்ந்த சுபாஷ்க்கு தமிழ் தெரியவில்லை என்பதால் ஆங்கிலத்தில் பேசியுள்ளார்.
இதற்கிடையே சுபாஷ் தனது பிறப்பின் உண்மை குறித்தும், தனது பூர்வீகம் குறித்தும் அறிந்துகொள்ளும் ஆவலுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் தனது குடும்பத்தினர் தொடர்பு கொண்டு பேசியதால், உண்மைகளை புரிந்துகொண்டு குடும்பத்தினரை சந்திக்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி சென்னை வந்த அவர், தனது குடும்பத்தினரை சந்தித்துள்ளார். 20 வருடங்களுக்கு பின்னர் தனது மகனை சந்தித்த தாய், அவரை கட்டி அணைத்து ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார்.
இருந்தாலும் அவர்களால் நேரடியாக உரையாடிக்கொள்ள முடியவில்லை. பெற்றோருக்கு தமிழ் மட்டுமே தெரிய, மகனுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரிந்துள்ளது. இருந்தாலும் அனைத்தையும் கடந்த அன்பால் அவர்கள் இணைந்துள்ளனர்.
இவர்களின் பிரிவிற்கு காரணமான மலேசிய நிறுவனம் இதுபோன்று 300 குழந்தைகளை கடத்தி வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் சுபாஷ், தான் தமிழ் பேச முடியாவிட்டாலும், கற்றுக்கொள்ள ஆவலுடன் இருப்பதாக கூறியுள்ளார்.
அத்துடன் தற்போது மீண்டும் அமெரிக்கா செல்வதாகவும், நடைமுறைகள் முடிந்த பின்னர் மீண்டும் தனது குடும்பத்துடன் இணையவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அடுத்துமுறை வரும் போது, முடிந்த அளவிற்கு தமிழை கற்றுக்கொண்டு வரப்போவதாகவும் அவர் கூறியுள்ளது அவரது பெற்றோரை நெகிழ வைத்துள்ளது.