சசிகலாவை அலட்சியப்படுத்த முடிவு! பேசுவதற்கு தடை: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் போட்டி

Report Print Santhan in இந்தியா
3884Shares

சென்னையில் நேற்று நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக யாரும் பேச முன் வாரத நிலையில், அவரது விடுதலையையும், வருகையையும் அலட்சியப்படுத்தும் படி கட்சியினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக்கத்தில், சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, இன்னும் ஏழு மாதங்களே உள்ளதால், அதற்கு முன் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்வதில், அதிமுகவில் இழுபறி நீடித்து வருகிறது.

முதல்வர் பதவிக்கு இ.பி.எஸ். மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இடையே, இதில் கடும் போட்டி நிலவி வருவதால், முதல் வேட்பாளரை முடிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது போன்ற சூழ்நிலையில், நேற்று மாலை, சென்னையில் உள்ள, கட்சி தலைமை அலுவலகத்தில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். ஆகியோர், தலைமை வகித்தனர். அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் பங்கேற்றனர்.

மாலை, 5:00 மணிக்கு துவங்கிய கூட்டம், 6:30 மணி வரை நடைபெற்றது. இதையடுத்து அமைச்சர்கள் சென்றதும், முதல்வர் மற்றும் துணை முதல்வரும், அவர்களின் ஆதரவு நிர்வாகிகளும், இரவு, 7:30 மணி வரை பேசினர்.

கூட்டத்தின் துவக்கத்தில், முதல்வர், துணை முதல்வர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர், தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

தி.மு.க.,வும், சசிகலாவும் நமக்கு பொது எதிரிகள். எனவே, சசிகலா குறித்து, யாரும் பேச வேண்டாம். அவரது விடுதலையையும், வருகையையும் அலட்சியப்படுத்துங்கள் என தடை போடப்பட்டுள்ளது.

இதனால், சசிகலா பற்றி யாரும் வாய் திறக்கவில்லை. சசிகலாவுக்காக, தடையை மீறி பேசவும், யாரும் முன்வரவில்லை.

முதல்வரும், துணை முதல்வரும், கட்சியினரிடம், கட்சி என்றாலே, கருத்து வேறுபாடு, மனக்கசப்பு ஏற்படும். அவற்றை எல்லாம் மறந்து, அனைவரும் ஒன்றிணைந்து, தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு, பிரகாசமாக உள்ளது. எனவே, அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பொதுவாக பேசியுள்ளனர்.

இதையடுத்து, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும் என, இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் சிலர், திடீரென பிரச்னையை எழுப்ப, இப்போது, அதுபற்றி பேச தேவையில்லை என, ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் எதிர்ப்பு குரல் எழுப்ப, இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், முதல்வர் வேட்பாளர் பிரச்னை, சசிகலா குறித்து, அமைச்சர்கள் உட்பட, யாரும் பொது வெளியில் எதுவும் பேசக் கூடாது. பத்திரிகையாளர்கள் கேட்டாலும், கருத்து கூற வேண்டாம். கூட்டத்தில் நடப்பதை வெளியில் கூறாதீர்கள்என, முதல்வரும், துணை முதல்வரும், அவர்களை அமைதிபடுத்தியுள்ளனர்.

மேலும், அ.தி.மு.க. செயற்குழு கூட்டம், வரும், 28-ஆம் திகதி காலை கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில், கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்க உள்ளது.

இந்த கூட்டத்தில், பொதுக்குழுவை கூட்டுவது குறித்தும், கட்சிக்கு வழிகாட்டி குழு அமைப்பது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

அதுமட்டுமின்றி, முதல்வர் வேட்பாளர் பற்றியும், கூட்டணி பற்றியும் விவாதிக்கப்பட உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், நேற்று முதல்வர் இ.பி.எஸ்., வந்தபோதும், சென்றபோதும், அவரது ஆதரவாளர்கள், தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என, கோஷமிட்டனர்.

துணை முதல்வர் ஓ.பி.எஸ்., வந்தபோது, அவரது ஆதரவாளர்கள், ஜெயலலிதா ஆசி பெற்ற மக்கள் முதல்வர்; ஜெயலலிதாவின் வாரிசு என கோஷமிட்டனர், இதன் மூலம் முதல்வர் வேட்பாளர் போட்டியில் இருவரும் தீவிரமாக இருப்பதை அறிய முடிகிறது.மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்