உலகம் அழிய இன்னும் இரண்டரை நிமிடங்களே! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட விஞ்ஞானிகள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
3230Shares
3230Shares
lankasrimarket.com

உலகில் பாதுகாப்பு சூழல் இருளடைந்து வருவது மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டு வரும் கருத்துக்கள் உள்ளிட்டவையின் பின்னணியில், உலகம் அழியும் நாள் இன்னும் நெருங்கிவிட்டதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

நவீன உலகில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், அணு ஆயுதப் போர் நடக்கும் சாத்தியக்கூறு போன்றவற்றால் உலகம் அழியக்கூடிய வாய்ப்புகளைக் கணக்கிட்டு, உலகிற்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம், விஞ்ஞானிகள் ஒரு 'உலகம் அழியும் நாள்' காட்டும் கடிகாரம் ஒன்றை அமைத்திருக்கின்றனர்.

அந்த கடிகாரத்தின் முட்கள் நள்ளிரவுக்கு நகர்ந்தால் உலகம் அழியும் என்று அர்த்தம்.

ஒவ்வொரு ஆண்டும் உலக பாதுகாப்பு சூழலின் தீவிரத்தன்மையை கணக்கிட்டு, இந்த கடிகாரத்தின் முட்களை விஞ்ஞானிகள் நகர்த்துகிறார்கள்.

இந்த ஆண்டு, அணு விஞ்ஞானிகள் இதழ் ஒன்று, இந்த கடிகாரத்தின் நிமிடம் காட்டும் முள்ளை, நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்கள் இருப்பதாக காட்டிய நிலையில் இருந்து இரண்டரை நிமிடங்களே இருப்பதாக நகர்த்தியிருக்கிறார்கள்.

அதாவது உலகம் அழிய இன்னும் இரண்டரை நிமிடங்களே இருக்கிறது என்று சொல்லுமளவுக்கு, உலகின் தற்போதைய பாதுகாப்பு சூழல் இருக்கிறதாம்!

இந்தக் கடிகாரத்தின் முட்கள் 'உலகம் அழியும் நள்ளிரவு' நேரத்தை இந்த அளவுக்கு நெருங்குமாறு காட்டப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

"போருக்கு இட்டுசெல்லக்கூடிய முறுகல் நிலையை தாங்களே எண்ணெய் ஊற்றி வளர்க்காமல், அமைதி" காக்கும்படி உலக தலைவர்களை அணு விஞ்ஞானிகள் இதழின் தலைவர் ரேச்சல் புரோன்சன் வலியுறுத்தியுள்ளார்.

பருவகால மாற்றம் குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கூற்றுகள், அமெரிக்காவின் அணு ஆயுத விரிவாக்கம், உளவு துறை நிறுவனங்களை கேள்விக்குள்ளாக்குதல் உள்ளிட்டவை உலகம் எதிர்கொள்ளும் ஆபத்துக்களின் சாத்தியக்கூறை உயர்த்தியிருப்பதாக அணு விஞ்ஞானிகளின் இதழ், அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் ஹைட்ரஜன் குண்டு பரிசோதகைளுக்கு பிறகு, 1953 ஆம் ஆண்டு உலக முடிவு நாளின் நள்ளிரவுக்கு இரண்டு நிமிடத்திற்கு முன்னால் இந்த அடையாள கடிகாரத்தின் நிமிட முள் குறிக்கப்பட்ட பிறகு, இந்த நிமிட முள் குறிப்பு மிகவும் நெருங்கி வந்திருப்பது இப்போது தான்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக முடிவு நாள் என்பது நள்ளிரவுக்கு 3 நிமிடங்களுக்கு முன்னர் என குறிக்கப்பட்டிருந்தது.

ஆனால், 2017 ஆம் ஆண்டு ஏற்படும் உலக பேரழிவு ஆபத்து அதிகமாக இருக்கும் என்று அணு விஞ்ஞானிகளின் இதழ் தெரிவிக்கிறது. எனவே, இந்த அடையாள கடிகாரத்தின் நிமிட முள் அரை நிமிடம் அதிகரித்து குறிக்கப்பட்டுள்ளது.

"டொனால்ட் டிரம்பால் தெரிவிக்கப்பட்டுள்ள அணு ஆயுதப் பயன்பாடு மற்றும் பரவலாக்கம் பற்றிய கவலை தரும் கருத்துக்களும், டிரம்ப் மற்றும் அவருடைய அமைச்சரவை நியமன உறுப்பினர்கள் தெரிவித்திருக்கும் பருவகால மாற்றம் பற்றிய ஒட்டுமொத்த அறிவியல் கருத்தொற்றுமையில் நம்பிக்கையில்லாத கூற்றுகளும்,

உலக அளவில் தோன்றியுள்ள தீவிர தேசியவாதமும் இந்த குழுவின் தீர்மானத்தை பாதித்தன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரான் அணு ஒப்பந்தம், இணையவெளி பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் போலிச் செய்திகளின் அதிகரிப்பு ஆகியவையும் இந்த குழுவின் தீர்மானத்தை பாதித்ததாக அணு விஞ்ஞானிகளின் இதழில் குறிப்பிடப்பட்டுள்ள பிற அம்சங்களாகும்.

1947 ஆம் ஆண்டு உலக முடிவு நாள் அடையாள கடிகாரம் உருவாக்கப்பட்டபோது, அந்த இறுதி நாளின் நள்ளிரவுக்கு 7 நிமிடங்களுக்கு முன்னதாக அதன் நிமிட முள் குறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments