ஹாங்காங் எல்லையில் படைகளை குவிக்கும் சீனா..! எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

ஹாங்காங்கை ஒட்டிய எல்லையில் சீனா தனது படைகளை குவித்து வருவதை, உளவுத்துறை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில், அரசை எதிர்த்து கடந்த சில மாதங்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்துச் செல்லும் அரசின் முடிவை மக்கள் எதிர்த்ததைத் தொடர்ந்து, அந்த முடிவு திரும்ப பெறப்பட்டது. எனினும், ஹாங்காங் நிர்வாக ஆட்சியாளர் கேரிலாம் பதவி விலக வேண்டும் என போராட்டங்கள் நீடித்து வருகின்றன.

போராட்டங்களின் ஒரு பகுதியாக ஹாங்காங் விமான நிலையத்தை முற்றுகையிடப் போவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். அதன்படியே தடையை மீறி விமான நிலையத்தில் நுழைந்த சுமார் 5 ஆயிரம் பேர், விமான நிலையம் முழுவதும் அமர்ந்துகொண்டு போராட்டம் நடத்தினர்.

இதனால், குறித்த விமான நிலையம் மூடப்பட்டு, அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் பெரும்பாலான போராட்டக்காரர்கள் இன்று விமான நிலைய வளாகத்தை விட்டு வெளியேறினர். அதனைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் விமான சேவை மீண்டும் தொடங்கியது.

இதற்கிடையில், ஹாங்காங் எல்லைப் பகுதியில் சீனா தனது படைகளை குவித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதனை உறுதிபடுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘ஹாங்காங்கை ஒட்டிய எல்லைப் பகுதியில் சீனா படைகளை குவித்து வருவதாக, உளவுத்துறை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அனைவரும் பொறுமையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

ஹாங்காங்கில் கடந்த 10 வாரங்களுக்கும் மேலாக போராட்டம் நீடித்து வரும் நிலையில், சீனா தனது படைகளை பயன்படுத்தும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தான் டிரம்ப் இவ்வாறு எச்சரிக்கை செய்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers