அமேசான் பழங்குடி மக்களில் பரவும் கொரோனா வைரஸ்: மொத்தமாக அழிவை சந்திக்கலாம் என அச்சம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வெளி உலகுடன் தொடர்பே இல்லாத அமேசான் பழங்குடி மக்களில் முதன் முறையாக கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு வெனிசுலா மற்றும் வடக்கு பிரேசிலின் வனப்பகுதிகளில் வாழும் யனோமாமி சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் தற்போது கொரோனாவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

பிரேசிலில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் குறித்த சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 3 ஆம் திகதி, கடுமையான காய்ச்சல் மற்றும் தொண்டைப் புண் காரணமாக மருத்துவரை நாடியதாக கூறப்படுகிறது.

தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையில், அடுத்தகட்ட சோதனையில் உறுதி செய்யப்பட்டதாக உள்ளூர் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

யனோமாமி சமூகமானது பிரேசிலில் வாழும் மிகப்பெரிய பழங்குடி இனமாகும். சுமார் 2.3 மில்லியன் ஏக்கர் வனப்பகுதியில், மொத்தம் 200 கிராமங்களில் இவர்கள் குடியிருந்து வருகின்றனர்.

கொரோனா பரவலால் பாடசாலைகள் முடங்கியுள்ள நிலையில், குறித்த 15 வயது சிறுவன், தங்களின் குடியிருப்புகளுக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.

இதனிடையே 7 பழங்குடி மக்களுக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது கடுமையான சிக்கலை அந்த சமூகத்திற்கு ஏற்படுத்தலாம் என பிரேசில் மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பழங்குடியின முதியவர்களே அதிக சிக்கலில் உள்ளதாகவும், இது அந்த சமூகத்தையே கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கலாம் என கூறுகின்றனர்.

1960 காலகட்டத்தில் பரவிய தட்டம்மை நோய்க்கு யனோமாமி பழங்குடியின மக்களில் 9 சதவீதத்தினர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்