சூரனை அழித்த நாள் இன்று

Report Print Kavitha in மதம்

கந்தசஷ்டியின் இறுதி நாளாக இன்று சூரசம்ஹாரம் கொண்டாடப்படுகின்றது.

சூரசம்ஹாரம் என்பது சூரபத்மன் எனும் அரக்கனை அழித்த நிகழ்வை குறிக்கின்றது.

சூரபத்மனை அழித்த நினைவாக முருகனுடைய ஆலயங்களில் இந்த நிகழ்வினை விழாவாக கொண்டாடுகிறார்கள்.

வரலாறு

கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் தலைகள், இரண்டாயிரம் கைகள். சூரபத்மனுக்கு அசுரமுகம். தாரகனுக்கு யானைமுகம். சிங்கமுகனுக்கு சிங்கமுகம்.

இவர்கள் குலகுருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவனை நோக்கித் தவமிருந்தனர். தவப்பயனாக 1008 அண்டங்களையும் ஆட்சிசெய்யும் வரம் பெற்றனர்.

சூரியன், சந்திரன், அக்னிதேவன், குபேரன் முதலிய தேவர்கள் அனைவரும் அசுரர்களின் பணியாளர்களாக மாறினர். தேவர்கள் பிரம்மாவிடம் சென்று தங்கள் நிலையைச் சொல்லி வருந்தினர்.

சூரபத்மனை அழிக்க சிவனால் மட்டுமே முடியும். அதனால் அவரிடம் முறையிட்டால் விடுதலை கிடைக்கும், என்றார் பிரம்மா. தேவர்களும் கைலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர்.

அவருக்கு சத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம், அதோமுகம் ஆகிய ஆறு முகங்கள் உண்டு. அவற்றில் இருந்து ஆறுநெருப்புப் பொறிகளை உண்டாக்கினார். அவை சரவணப்பொய்கையில் விழுந்து குழந்தைகளாக மாறின. அவற்றை ஒன்று சேர்த்த போது கந்தன் ஆனார்.

தேவர்களை அடிமைப்படுத்தி மக்களை வதைத்த தகராசுரன் மற்றும் சூரபத்மனை வதம் செய்ய அவதரித்தார் முருகப் பெருமான். சூரபத்மனை அழிக்க திருச்செந்தூர் வந்த முருகன் சூரபத்மனின் கதையை குருபகவானிடம் கேட்டறிகிறார். பிறகு இறுதி வாய்ப்பாக நவ விரர்களுள் ஒருவரான வீரவாகுவை தூதாக சூரபத்மனிடம் அனுப்புகிறார்.

கடல் கடந்து செல்லும் வீரவாகு சூரபத்மனின் தீவான வீரமகேந்திர புரத்தை அடைகிறார். அங்கு முருகனிடமிருந்து தான் கொண்டு வந்த செய்தியைக் வீரவாகு கூறியும், அடிபணியாத சூரபத்மன் போருக்குத் தயாராகிறான்.

முருகப் பெருமானைப் போருக்கு அழைத்தான் சூரமபத்மன்.

ஆணவம் குறையாத சூரபத்மனை அழிக்க தன் படையுடன் வீரமகேந்திரம் புரம் அடைந்தார் முருகன். ஆறு நாள் கடுமையான போரில் போரில் அனைத்தையும் இழந்த சூரபத்மன் சரணடைய மறுத்து கடலில் ஒழிந்துக் கொள்கிறான்.

ஆறாம் நாள் மாமரமாக உருவெடுக்கும் சூரபத்மனை ஏமகூடத்தில் தன் வேலால் இரண்டாக பிளந்தார் முருகன். இங்கே ஏமகூடம் என்று கூறப்படும் இடம்தாம் கதிர்காமம் அல்லது கதிர மலை. சூரசம்ஹாரத்திற்குப் பிறகு வீர மகேந்திரபுரம் கடலில் அமிழ்ந்துவிடுகிறது.

தன் படையுடன் முருகப்பெருமான் திருச்செந்தூர் வந்தடைகிறார். அங்கு சிவலிங்க மூர்த்தியை வணங்கி பூஜித்தார்.

சூரனை வதம் செய்த இடம் தற்போதைய கதிர்காமம். அதேவேளையில் தன் அவதார நோக்கத்தை முருகப் பெருமான் பூர்த்தி செய்ய, இந்த சம்ஹார வெற்றியை தேவர்கள் அனைவரும் கொண்டாடிய பரம புண்ணியத் தலம் திருச்செந்தூர்.

இவர் சூரபத்மனை வெற்றி கொண்டு தேவர்களைக் காத்தார். ஐப்பசி சஷ்டிதிதியில் சூரசம்ஹாரம் நிகழ்ந்ததாக ஐதீகம்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers