கந்தபுராணம் அரங்கேறிய இடம் இதுதாங்க!

Report Print Kavitha in ஆன்மீகம்

முருகப்பெருமான் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் திருக்கோலத்தில் அருளும் திருத்தலமே குமரக்கோட்டம்.

இங்கு முருகப்பெருமான் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் ‘பிரம்ம சாஸ்தா’ வடிவில் அருள்கிறார். முருகர் மான் தோலை இடுப்பிலும், தர்ப்பையால் ஆன அரைஞாண் கொடியும் அணிந்துள்ளார்.

கீழ் வலது திருக்கரத்தில் அபயம் வழங்கும் திருக்கோலம், மேல் வலது திருக்கரத்தில் ருத்திராட்ச மாலை, கீழ் இடக்கரத்தை மடி மீது பொருத்தி, மேல் இடக்கரத்தில் கமண்டலத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக் கிறார்.

இத்தலத்தில் முருகப்பெருமான், சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தன் பக்தர்களுக்கு அருள்புரி கிறார்.

குமரக்கோட்டத்தில் முருகப்பெருமான், பிரம்ம சாஸ்தா கோலத்தில் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் திருக்கோலத்தில் அருளுவதால், இப்பிறவியில் கஷ்டப் படுபவர்கள் மற்றும் வாழ்க்கையே இவ்வளவுதானா? என சலித்துக் கொள்பவர்கள், கஷ்டத்தையும் நஷ்டத்தையுமே இப்பிறவியில் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள், இறைவா! எனது தலை எழுத்தை மாற்றிக் கொடு என எண்ணுபவர்கள் வழிபட வேண்டிய தலம் குமரக்கோட்டம். இங்கு அருள்புரியும் குமரன் நிச்சயமாக நமது தலைவிதியை மாற்றிக் கொடுப்பான்.

ஆம்! குமரக்கோட்டம் குமரனை வணங்கினால், நம் விதியையும் முருகனின் அருளால் வெல்லலாம் என்பது நிச்சயம். ஒரு முறை பிரளயம் வந்து உலகமே அழிந்து போயிற்று.

அப்போது பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்த மார்கண்டேயர் திருமாலிடம், ‘உலக உயிர்கள் அனைத்தும் என்னாயின?’ என வினவ, திருமாலோ ‘என் வயிற்றில் உள்ளன’ என உரைத்தார். இதை நம்பாத மார்கண்டேயர் காஞ்சீபுரம் வந்தார். அங்கு உலகம் அழிந்தாலும் அழியாத காஞ்சீபுரம் ஏகாம்பரநாதரை வணங்கி வாழ்வு பெற்றார்.

இதனைக் கண்ணுற்ற திருமாலும் காஞ்சீபுரம் வந்து ஏகாம்பரநாதரைப் பணிந்தார். பின்பு குமரக்கோட்டம் வந்த திருமால், தன்னுடைய மருமகனுடன் ‘உருகும் உள்ளத்தான்’ என்றத் திருநாமத்தில் தனிச் சன்னிதியில் எழுந்தருளினார்.

ஆம்! குமரக்கோட்டத்தில் ‘உருகும் உள்ளப் பெருமாள்’ என்ற திருநாமத்தில் தனிச்சன்னிதியில் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார் மகாவிஷ்ணு.

குமரக்கோட்டத்து குமரனை, கச்சியப்ப சிவாச்சாரியார் என்னும் அர்ச்சகர் பூஜித்து வந்தார். அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘வடமொழியில் மிகவும் பிரசித்திப்பெற்ற கந்த புராணத்தின் ஆறு சங்கிதைகளுள் சங்கர சங்கிதையின் முதற்காண்டமாகிய சிவ ரகசியக் காண்டத்தில் உள்ள எமது வரலாற்றை கந்தபுராணம் என்ற பெயரில் பாடுவாயாக’ என்று கூறினார். மேலும் ‘திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என முதல் அடியையும் எடுத்துக் கொடுத்தார் கந்தபெருமான்.

இதையடுத்து கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணத்தை எழுதத் தொடங்கினார். காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் உள்ள மாவடிக்குச் சென்று தினமும் 100 பாடல்களை அங்கிருந்து எழுதி, பின்பு தினமும் இரவு அன்று எழுதிய நூறு பாடல்களையும் குமரக்கோட்டம் முருகன் கருவறையில் வைத்து அடைத்து விடுவார்.

மறுநாள் அதிகாலை, முருகப்பெருமானின் கருவறையைத் திறக்கும்போது, அப்பாடல் களில் தவறுகள் இருந்தால் குமரக்கோட்டம் குமரனே திருத்தம் செய்திருப்பாராம். கூடவே ‘காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி’ என காப்புச் செய்யுளையும் இயற்றி, கந்தபுராணத்தை நிறைவு செய்தார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

அதைத் தொடர்ந்து முருகப்பெருமானின் ஆணைப்படி ‘கந்த புராணம்’ குமரக்கோட்டத்தில் அரங்கேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அரங்கேற்றத்திற்கு வந்திருந்த தமிழ் புலவர் களுக்கு ஏற்பட்ட ஐயப்பாட்டைப் போக்க, முருகப்பெருமானே புலவர் வடிவில் வந்து அவர்களின் ஐயத்தைப் போக்கினார்.

இந்த ஆலயத்தில் சந்தான கணபதி, முருகன் வழிபட்ட சேனாபதீஸ்வரர், வரசித்தி கணபதி, தண்டபாணி, சண்முகர், முத்துக்குமார சுவாமி, பைரவர் மற்றும் நவவீரர்களுக்கும் சன்னிதிகள் உள்ளன.

பாம்பன் குமரகுருதாச சுவாமிகளுக்காக இத்தல முருகன் ரெயிலை தாமதமாக வரச் செய்தான். பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் சிலை ஆலய நுழைவு வாசலிலேயே எழிலுற அமைந்துள்ளது. உற்சவர் முருகப்

பெருமான், வள்ளி– தெய்வானையுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ‘கந்த புராணம்’ அரங்கேறிய மண்டபம் ஆலயத்தில் இருக்கிறது. இத்தல பைரவரை அஷ்டமியிலும், முருகனுக்குரிய சஷ்டி, கிருத்திகை நாட்களிலும் வழிபட்டு வந்தால் பகை, பிணி விலகி சகலத்திலும் நன்மையே உண்டாகும்.

இத்தல முருகனுக்கு தேன் அபிஷேகம் தினமும் செய்யப்படுகிறது. இதனைக் கண்குளிர கண்டு தரிசித்தாலே சகல நற்பேறுகளும் கிட்டும். குமரக்கோட்டம் குமரனுக்கு தீபாவளியில் மட்டும் நல்லெண்ணெய் அபிஷேகம் உண்டு. இங்கு மாத கிருத்திகை, திருக்கார்த்திகை, சஷ்டி, கந்த சஷ்டி விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.

திருக் கார்த்திகையில் ஆலயம் முழுவதும் தீபங்களால் சுடர்விடும். கந்த சஷ்டியில் ஆறு நாட்களும் விரதமிருந்து, சூரசம்ஹாரம் அன்று குமரனை 108 முறை வலம் வந்தால், மனதில் எண்ணியவை எளிதாக ஈடேறும். கந்த சஷ்டியில் சூரசம்ஹாரம் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.

- Daily Thanthi

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்