நீங்கள் பூச நட்சத்திரத்தில் பிறந்தவரா? இதோ உங்கள் பொது குணங்கள்

Report Print Kavitha in ஆன்மீகம்

27 நட்சத்திரங்களில் சிறப்பு வாய்ந்த சில நட்சத்திரங்களுள் பூச நட்சத்திரம் திகழ்கின்றது.

தற்போது இந்த நட்சத்திரக்காரர்களின் பொதுபலன்கள் மற்றும் சிறப்பியல்புகள் என்ன என்பதை பார்ப்போம்.

பொதுவான குணங்கள்

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திறமைசாலிகள். புத்திக்கூர்மை உள்ளவர்கள். எதையும் எளிதில் கிரகித்துக்கொள்ளக்கூடியவர்கள்.

சுதந்திரமாக வாழ நினைப்பவர்கள். அடக்கமானவர்கள். அதே நேரம், ஆத்திரமும் கோபமும் உள்ளவர்கள்

பூசம் நட்சத்திர சிறப்பியல்புகள்

ஜோதிட சாஸ்திரத்தில் சனீஸ்வரன் நீதிமான் என வர்ணிக்கப்படுகிறார். அந்த சனீஸ்வர பகவானுக்கு உரிய பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீதி, நேர்மை, நியாயத்திற்காக பாடுபடுபவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு உடல் உறுதியும், மன உறுதியும் அதிகமுண்டு. எத்தகைய சிக்கலான பிரச்சனைகளுக்கும் சுலபமாக தீர்வுகளை கண்டு செயல்படுவார்கள்.

ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாக பூச நட்சத்திரக்காரர்கள் இருக்கிறார்கள். ஒரு சிலர் தங்களின் ஆன்மீக வாழ்க்கைக்காக தங்களின் குடும்பம், செல்வம் ஆகிய அனைத்தையும் துறந்து விடும் திட சித்தத்தையும் பெற்றிருப்பார்கள்.

இந்த நட்சத்திரக்காரர்கள் அனைவராலும் விரும்பப்படுகிறவர்களாக இருப்பார்கள். பலவகையான விடயங்களைப் பற்றியும் ஓரளவாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும் என விரும்புவார்கள்.

எல்லா விடயங்களிலும் தூய்மை மற்றும் சுகாதாரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பார்கள். இவர்களில் பலர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தங்களின் கடுமையான உழைப்பின் மேலும் வாழ்வில் மிக உயர்ந்த நிலைக்கு செல்வார்கள். நெருக்கடியான நிலைகளிலும் திறம்பட செயலாற்றும் குணம் கொண்டவர்கள்.

சனி பகவானுக்குரிய நட்சத்திரமாக இருப்பதால் இவர்களில் பெரும்பாலானோருக்கு மனதில் ஏதேனும் இனம் புரியாத ஒரு சோகம் இருக்கும். பிறருக்கு தங்களால் முடிந்த எந்த வகையிலும் உதவி செய்வதற்கு தயாராக இருப்பார்கள்.

மற்றவர்களுக்கு சவாலாகவும், கடினமாக இருக்கும் விடயங்களையும் இவர்கள் தங்களின் திறமையால் எளிதில் சாதித்து வெற்றி பெறுவார்கள்.

ஒழுக்கமான வாழ்க்கை வாழவே விரும்புவார்கள். தவறு செய்தவர்களை மன்னிக்கும் குணம் இருக்கும். தங்களின் மனசாட்சிக்கு பயந்து நடப்பவர்களாக இருப்பதால் தவறான செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

உறவினர், நண்பர்கள், விருந்தினர்களை உபசரிப்பதில் சிறந்தவர்கள். பொறுமை குணம் அதிகம் இருந்தாலும் இவர்களுக்கு சில சமயங்களில் சட்டென கோபம் ஏற்பட்டு விடும்.

தங்களின் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படும் போது எரிமலையாக வெடிப்பார்கள். வாழ்வில் எந்த ஒரு விடயத்திலும் சுலபத்தில் அஞ்சாமல், மன உறுதியுடன் எதிர்த்து போராடி வெற்றி பெறுவார்கள்.

மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் இந்த நட்சத்திரக்காரர்கள் இருக்கிறார்கள். முக அமைப்பு பிறரை கவரும் வகையில் இருக்கும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செய்நன்றி மறவாதவர்களாக இருக்கின்றனர். பாரம்பரிய பழக்க வழக்கங்களில் பற்றுடையவர்கள். அதேநேரம் புதுமையை வரவேற்கவும் தயங்காதவர்கள். மனதளவிலும் பிறருக்கு தீங்கு செய்வோர் நினைக்காதவர்கள்.

இந்த பூச நட்சத்திரக்காரர்களுக்கு சிறந்த கற்பனை வளம் அதிகம் இருப்பதால் கதை, கவிதை, கட்டுரை எழுதுதல் போன்ற துறைகளில் பிரகாசிப்பார்கள்.

இளமை காலங்களில் போராட்டமான வாழ்க்கையை ஏற்பட்டாலும் நடுத்தர வயது மற்றும் பிற்பாதி வயதுகளில் மிகுந்த சொத்துக்களை சேர்ப்பார்கள்.

எவ்வளவு அதிகம் சம்பாதித்தாலும் எப்போதும் தன்னடக்கத்துடன் நடந்து கொள்வார்கள். ஒரு சிலர் தங்களின் உழைப்பால் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்களாகவும், பிரபலங்களாகவும் மாறுவார்கள்.

சமூகத்தில் உயர்ந்த மனிதர்களின் நட்பும் அதனால் மிகுதியான ஆதாயமடைவார்கள். திரைப்படத்துறை, இரும்பு சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி, கப்பல்துறை பெட்ரோல், டீசல் போன்ற எண்ணெய் துறைகளில் ஈடுபட்டு அதிகம் வருமானம் பெறுவார்கள்.

பூசம் நட்சத்திரக்காரர்கள் பெரும்பாலும் காதல் போன்ற விடயங்களில் ஈடுபட்டு அதில் தோல்வி அடைந்தவர்களாக இருக்கின்றனர்.

எனினும் தங்களுக்கு வருகின்ற வாழ்க்கைத்துணையிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள். சற்று சபல புத்தி இருந்தாலும் ஒழுக்கக் கேடான செயல்களில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள்.

கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை அதிகம் விரும்புவார்கள். தங்களுக்கு உற்றார், உறவினர்கள் செய்த உதவிகளை ஒருபோதும் மறவாமல், தக்க சமயத்தில் அவர்களுக்கு பதில் உதவி செய்வார்கள்.

எப்படிப்பட்ட உணவு என்றாலும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து உண்பதில் இன்பம் காண்பார்கள். வாழ்வில் வசதியான வீடு, வாகனம் ஆகியவை அமையப் பெறுவார்கள்.

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

பரணி, பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி ஆகிய ஆண் – பெண் நட்சத்திரக்காரர்களை பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

வழிபட வேண்டிய தெய்வம்

பூச நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட தெய்வமாக தட்சிணாமூர்த்தி இருக்கிறார். இவரை தினந்தோறும் வழிபடுவதால் நன்மையான பலன்கள் அதிகம் ஏற்படும்.

பூசம் நட்சத்திர பரிகாரங்கள்

பூசம் நட்சத்திரகாரர்கள் தங்கள் நட்சத்திர அதிபதியான சனி பகவானை சனிக்கிழமைகளில் கருப்பு எள் கலந்த விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, சனி பகவான் மந்திரங்கள் துதித்து வழிபட்டு வர வேண்டும்.

வருடத்திற்கொருமுறை திருநள்ளாறு சனி பகவான் கோயிலுக்கு சென்று, சனி ப்ரீத்தி பூஜை செய்து வழிபட வேண்டும்.

சனி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆஞ்சநேயரையும் பூஜித்து வர வாழ்வில் நன்மைகள் பல உண்டாகும்.

தினமும் நீங்கள் காலை உணவை சாப்பிடும் முன்பு உணவிலிருந்து கொஞ்சத்தை எடுத்து காகங்களுக்கும், சாப்பிட்டு முடித்த பின்பு உணவின் மீதத்தை தெரு நாய்களுக்கு வைப்பது சனி தோஷத்தை போக்கும்.

பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தருபவை
  • அதிர்ஷ்டக் கிழமைகள்: சனிக்கிழமை
  • அதிர்ஷ்ட விருட்சம் : அரச மரம்
  • அதிர்ஷ்ட நிறங்கள் : சிவப்பு
  • அதிர்ஷ்ட எண்கள் : 8
  • அதிர்ஷ்ட ரத்தினம் : முத்து
  • அதிர்ஷ்ட உலோகம்: இரும்பு
  • அதிர்ஷ்ட பறவை : கடற் காகம்
  • அதிர்ஷ்ட ஆங்கில எழுத்துகள் : H,D

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers