இலங்கை உள்நாட்டுப் போர்: ரத்தத்தை அடக்க வழியில்லாமல் மண்ணை பூசிய துயர கதை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

இலங்கையில் முள்ளிவாய்க்கால் 10-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் நிலையில் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழர் ஒருவர் தமது அனுபவத்தை தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு பகிர்ந்துள்ளார்.

போர் முடிந்து பத்தாண்டுகளாகியும் நீதி கிடைக்காதது ஏற்படுத்தும் வலியும், மன உளைச்சலும் ஒருபுறமிருக்க, தங்களது இளமை காலத்தில் போரின்போது சந்தித்த மோசமான நினைவுகளால், இன்றுவரை தினந்தினம் தூக்கத்திலிருந்து அலறித்துடித்து எழுந்து கொள்வதாக குமுறுகிறார்கள் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள்.

தற்போது பிரித்தானிய தலைநகர் லண்டனில் வசித்து வரும் ரோஷிணி தமது நினைவுகளை தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு பகிர்ந்துள்ளார்.

அதில், தனக்கு அப்போது 13 வயதிருக்கும் என கூறும் அவர், யாழ்ப்பாணத்தில் வசிப்பது உயிருக்கு அச்சுறுத்தல் என்று தெரிந்த பிறகு, குடும்பம் குடும்பமாக கடலை கடந்து வன்னியை நோக்கி சென்றுக்கொண்டிருந்தோம்.

ஆனால், அப்போதுதான் தெரிந்தது அங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளேதென்று. எனவே, வேறு வழியின்றி மீண்டும் யாழ்ப்பாணத்தை நோக்கி செல்ல நேரிட்டதாகவும்,

அப்போது உள்நாட்டுப் போரின் காரணமாக பல ஆண்டுகளுக்கு நடத்தப்படாமலிருந்த யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூர் கந்தசாமி முருகன் கோயிலில் தீர்த்த திருவிழா வெகுகாலத்திற்கு பிறகு நடத்தப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

உயிர் தப்பினால் போதும் என்ற எண்ணத்தின் காரணமாக சொந்தங்களை விட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கனோர் இந்த திருவிழாவிற்காக ஒன்று கூடியதாக கூறும் ரோஷிணி,

குண்டுவீச்சுகளையும், துப்பாக்கிகளின் சத்தத்தையும், பீரங்கிகள் உண்டாக்கிய பிணக் குவியல்களையும், இரத்த ஆறுகளையும் பார்த்து, பார்த்து மரண பீதியில் உறைந்து போயிருந்த நாங்கள் அப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விட்டோம் என்றார்.

ஆனால், அந்த நிம்மதி வெகுநேரத்திற்கு நீடிக்கவில்லை. நாங்கள் கோயில் திருவிழாவை ரசித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென்று ராணுவ ஹெலிகொப்டர் ஒன்று தங்களை நோக்கி பறந்து வந்துக் கொண்டிருந்தது.

மக்கள் அனைவரும் ஒன்றுக்கூடி இருப்பதை அறிந்த ராணுவம் மொத்தமாக கொன்று குவிப்பதற்கே வந்துக்கொண்டிருப்பதாக எண்ணி, அலறி துடித்த மக்கள் அங்கும், இங்கும் சிதறி ஓட ஆரம்பித்தனர்.

நான் அருகிலுள்ள ஒரு இடத்தில் ஒளித்து கொண்டேன். என்ன நடக்கப் போகிறதோ என்று அதிர்ச்சியின் பிடியில் சிக்கியிருந்த நேரத்தில், கோயிலுக்கு நேரே பறந்த ஹெலிகொப்டர் சிவப்பு பூக்களை கொட்டி இன்ப அதிர்ச்சி அளித்தது என்று தனது வாழ்வின் மறக்க முடியாத அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் ரோஷிணி.

மட்டுமின்றி இறுதிகட்ட போரில் ராணுவத்தின் தாக்குதலில் படுகாயம் அடைந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உடலிலிருந்து வெளியேறிய இரத்தத்தை தடுத்து நிறுத்துவதற்கு தக்க மருத்துவ வசதியோ அல்லது துணிகூட இல்லையென்றும்,

அதன் காரணமாக மக்கள் மண்ணை எடுத்து இரத்தம் வெளியேறிய பகுதிகளில் அடைக்க தொடங்கினர் என்றும் இன்னொருவர் தமது அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers