ஆளில்லா விமானத்தால் ஈரானிய தளபதி படுகொலை செய்யப்பட்டது அமைதியை நிலைநாட்டவே என பிரித்தானியாவுக்கான அமெரிக்க தூதர் வூடி ஜான்சன் முதன் முறையாக விளக்கமளித்துள்ளார்.
ஈரானிய தளபதி குவாசிம் சுலைமானியின் படுகொலையை ஆதரித்துள்ள வூடி ஜான்சன், அது ஒரு ஆத்திரமூட்டும் தாக்குதல் அல்ல என்றும் வலியுறுத்தியுள்ளார்.
குவாசிமின் படுகொலைக்கு பழி வாங்கும் நோக்கில் ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் 16 ஏவுகணை தாக்குதல் முன்னெடுத்த நிலையில், தெஹ்ரனும் வாஷிங்டனும் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கவில்லை.
தாக்குதல் சம்பவம் நடந்து ஒரு வார காலம் கடந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் முதன் முறையாக பேசியுள்ள வூடி ஜான்சன்,
ஜனாதிபதி டிரம்ப் எப்போதும் அமைதியை விரும்புபவர் எனவும், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராகவே உள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொலை செய்வது என்பது அமைதி விரும்பும் நடவடிக்கையா என்ற கேள்விக்கு பதிலளித்த வூடி ஜான்சன்,
அமெரிக்க ஜனாதிபதியை பொறுத்தமட்டில், தங்கள் குடிமக்களை பாதுகாக்க வேண்டியது கடமை என குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய தளபதி குவாசிம் சுலைமானி படுகொலையில் அமெரிக்கா மீது ஏற்பட்டிருந்த ஆத்திரம் ஈரானுக்கு தணிந்திருந்தாலும்,
ஈரானில் விபத்துக்குள்ளான உக்ரேன் விமானம் தொடர்பில் மர்ம வெளிச்சத்துக்கு வரும்பட்சத்தில் மீண்டும் பதற்றம் இறுகலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
