6 போர்களில் உயிரிழந்தவர்களை விட கொரோனாவால் உயிரிழந்தவர்களே அதிகம்! தவிக்கும் வல்லரசு நாடு

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் ஆறு போர்களில் இறந்ததை விட, இப்போது கொரோனா வைரஸால் இறந்தவர்களே அதிகம் என்பதால், கொரோனா பரவலை தடுப்பதற்காக அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சீனாவின் வுஹான் நகரில் முதன் முறையாக கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளை தாக்கி வருகிறது.

சீன வைரஸ் என்று அதனை விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கொரோனாவை எதிர்கொள்ள அமெரிக்கா தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

ஆனால் இன்று உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

businessinsider

இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இத்தாலி, ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக இறந்தவர்களின் எண்ணிக்கையிலும் 11 ஆயிரத்தை அமெரிக்கா நெருங்கியிருக்கிறது.

கடந்த 1775-ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா எதிர்கொண்ட ஆறு போர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட இந்த வைரஸ் தாக்குதலால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றே கூறலாம்.

அமெரிக்க புரட்சி, 1812-ஆம் ஆண்டுப் போர், இந்தியப் போர்கள், மெக்ஸிகோ போர், ஸ்பானிய - அமெரிக்கப் போர் மற்றும் வளைகுடாப் போர் போன்ற ஆறு போர்களில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 961 பேர், ஆனால் கொரோனாவால் இதுவரை 10 ஆயிரத்து 941 பேரை அமெரிக்கா இழந்துள்ளது.

photo. (Credit: Reuters)

பிப்ரவரி மாதம் 15-ஆம் திகதி வெறும் 15 பேர் மட்டுமே அமெரிக்காவில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மார்ச் மாதத்தில் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வந்தது.

ஏப்ரல் 4-ஆம் திகதியன்று அதிகபட்சமாக 34 ஆயிரத்து 196 பேருக்கு ஒரே நாளில் தொற்று ஏற்பட்டது. மார்ச் 1-ஆம் திகதி கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் ஏப்ரல் 4-ஆம் திகதியன்று உலக அளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரே நாளில் 1330 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பாதியளவு நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். நியூயார்க்கில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பும் 5 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

உலகின் பிரபலமான சுற்றுலாத்தலமான நியூயார்க்கில் மக்கள் அடர்த்தி அதிகம். ஒரு சதுர மைலுக்கு 27,000 பேர் வசிக்கும் நியூயார்க்கில் தொற்று அதிகமாகப் பரவ மக்கள் அடர்த்தியே காரணம் என்கின்றனர் தொற்றுநோய் நிபுணர்கள்.

அதிக அளவில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதும் நியூயார்க்கில் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்