குழந்தையை இப்படியா தனியாக காரில் விட்டுச் செல்வது?: தாயை வெளுத்து வாங்கிய திருடன்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா
339Shares

கார் திருடும் ஒருவர், குழந்தையை காரில் விட்டு விட்டு ஷாப்பிங் சென்ற தாயை தேடி வந்து, பொலிசில் பிடித்து கொடுத்து விடுவேன் என்று திட்டிய சம்பவம் ஒன்று அமெரிக்காவில் நடைபெற்றது.

அமெரிக்காவில் Beaverton என்ற இடத்திலுள்ள மளிகை கடை ஒன்றின் முன் தன் காரை நிறுத்திவிட்டு, எஞ்சினை அணைக்காமலே கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றார் Crystal Leary.

அப்போது, கார் திருடும் நபர் ஒருவர் Crystalஇன் காரை திருடிச் சென்றுள்ளார். சற்று தூரம் சென்ற பிறகுதான் காருக்குள் குழந்தை ஒன்று இருப்பதைக் கவனித்துள்ளார் அந்த நபர்.

இதற்குள் Crystalஇன் காரை ஒருவர் திருடிச் செல்வதை கவனித்த கடை ஊழியர் ஒருவர் அவருக்கு தகவல் சொல்ல, அலறியடித்துக்கொண்டு ஓடி வந்துள்ளார் அவர். என்ன செய்வது என தெரியாமல் திகைத்துப்போய் Crystal நிற்கும் நேரத்தில், அவரது கார் மீண்டும் அவர் அருகிலேயே வந்து நின்றுள்ளது.

காருக்குள்ளிருந்த திருடன் Crystalஐ அழைத்து, உனக்கு அறிவிருக்கிறதா, குழந்தையை இப்படி தனியாக காருக்குள்ளேயே விட்டு விட்டு போயிருக்கிறாயே, உன்னை பொலிசில் பிடித்துக் கொடுத்து விடுவேன் என கத்தியிருக்கிறார்.

Crystalஇடம், குழந்தையை காரிலிருந்து இறக்கச்சொல்லிய அந்த திருடன், குழந்தை காரிலிருந்து இறங்கியதும், மீண்டும் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து விரைந்திருக்கிறார்.

சில மணி நேரத்திற்குப் பின், அந்த கார் சற்று தொலைவில் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டிருந்ததை பொலிசார் கண்டு அதை மீட்டு Crystalஇடம் ஒப்படைத்துள்ளார்கள்.

திருடனிடம் திட்டு வாங்கிய Crystal, இனி மறந்தும்கூட இதே தவறை செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார். பொலிசார் அந்த வித்தியாசமான திருடனை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்