திருமணப்பொருத்தம்... கவனிக்க வேண்டிய ஜாதக அம்சங்கள்!

Report Print Printha in ஜோதிடம்
0Shares
0Shares
lankasrimarket.com

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்' என்பார்கள். அத்தனை சிறப்பு வாய்ந்த திருமணத்துக்கு வரன் பார்க்கும்போது குடும்பம், வயது, படிப்பு, அழகு ஆகியவற்றுடன் முக்கியமாக ஜாதகமும் பார்ப்பார்கள்.

ஜாதகம் பொருந்தவில்லை என்றால் திருமணம் செய்யமாட்டார்கள். அதுவும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களில், திருமணப்பொருத்தம் பார்த்துதான் திருமணம் செய்வார்கள்.

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது பத்து பொருத்தங்கள் மட்டும் பார்த்தால் போதுமா?

ஜோதிடரும், கோவை கற்பகம் பல்கலைக்கழக ஜோதிடவியல் துறைத் தலைவருமான முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

"பத்து பொருத்தங்கள் மட்டும் பார்ப்பது சரியில்லை. மேலும் சில அம்சங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும்" என்றவர், அதுபற்றி விரிவாகப் பேசினார்.

"திருமணப் பொருத்தம் பார்க்கும்போது, ஆண், பெண் இருவரது ஜாதகங்களிலும் உள்ள முக்கியமான அம்சங்களையும் தனித்தனியே ஆய்வுசெய்து, அதன் பிறகே பொருத்தம் பார்க்கவேண்டும்.

தனித்தனியே அந்த ஜாதகங்கள் பலம் வாய்ந்த ஜாதகங்களாக இருக்கின்றனவா எனப் பார்க்கவேண்டும். அதற்கு அடுத்ததாக, அந்த ஜாதகர்களின் வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்க இருக்கும் தசா புக்திகளைப் பார்க்கவேண்டும்.

இரண்டு பேருடைய ஜாதகங்களுக்கும் ஒரே மாதிரியான ஆயுள் பாவம் இருக்கவேண்டும். ஒருவருக்குக் குறைந்த கால வாழ்க்கையும் மற்றொருவருடைய ஜாதகத்தில் நீண்ட ஆயுள்பாவமும் இருந்தால் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கக்கூடாது.

இல்லறம் சிறப்பாக இருக்கவேண்டுமானால், தாம்பத்ய உறவு மகிழ்ச்சியானதாக இருக்கவேண்டும். அதற்கு இருவருடைய ஜாதகத்திலும் சுக்கிரன் நல்ல நிலையில் இருக்கவேண்டும் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சமாகும்.

அடுத்ததாக செவ்வாய் தோஷம் இருக்கிறதா, இல்லையா... இருந்தால் தோஷம் நிவர்த்தியாகி இருக்கிறதா என்ற கோணத்தில் இருவருடைய ஜாதகத்தையும் பரிசீலிக்கவேண்டும்.

அடுத்ததாக நாகதோஷம் இருக்கிறதா என்பது பற்றியும் பார்க்க வேண்டும். ஒருவேளை நாகதோஷம் இருந்து, அந்த தோஷம் பாதிக்காதபடி ஏதேனும் விதிவிலக்கான கிரக அமைப்புகள் இருக்கின்றதா என்றும் பார்க்கவேண்டும்.

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது அடுத்த அடுத்த ராசிகளில் உள்ளவர்களுக்கு மணமுடிக்கக் கூடாது.

ஏனென்றால், ஏழரைச்சனி, கண்டகச்சனி, அஷ்டமச்சனி ஆகிய காலகட்டங்களில் இருவருமே மிகவும் சிரமப்படுவார்கள். ஒருவருக்கொருவர் சண்டைச் சச்சரவு மற்றும் மனமாச்சர்யங்கள் ஏற்படும்.

குறிப்பாக, ஜாதகக்கட்டத்தில், 2, 5, 7,8, 9 ஆகிய ஐந்து இடங்களையும் மிக முக்கியமாக கவனிக்க வேண்டும்.

இரண்டாமிடம் தனம், குடும்பம், வாக்குஸ்தானத்துக்கு உரியதாகவும், 5 - ம் இடம் பூர்வ புண்ணியஸ்தானமாகி வம்ச விருத்திக்கும் 7 - ம் இடம் கணவன் மனைவி அந்நியோன்யத்துக்கும், 8 - ம் இடம் ஆயுள் பாவத்துக்கும், 9 -ம் இடம் சுகங்களை அனுபவிப்பதற்கும் காரகத்துவம் பெறுவதால், அவற்றை முக்கியமாக கவனிக்கவேண்டும்.

ஆண், பெண் இருவரின் ஜாதகங்களிலும் குரு வலுப்பெற்று இருப்பதுடன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோரும் நல்ல நிலையில் அமைந்திருக்கவேண்டும்.

7- ம் இடத்தின் மீது அல்லது 7- ம் இடத்து அதிபதி மீது குருவின் பார்வை இருப்பது, ஒரு சந்தோஷமான, நிரந்தரமான திருமண வாழ்க்கைக்கு உறுதி அளிக்கும். சனியும், செவ்வாயும் லக்னாதிபதிகளாக அல்லது யோகக்காரகர்களாக இருப்பதும் திருமண வாழ்க்கையில் நல்ல பலன்களைத் தரும்.

இதன் பிறகுதான் திருமணத்துக்கு உரிய பத்து பொருத்தங்களில் எத்தனை பொருத்தங்கள் சரியாக இருக்கின்றன எனப் பார்க்க வேண்டும்.

அவற்றுள் முக்கியமான பொருத்தங்களான, தினப்பொருத்தம், கணப்பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், வேதைப் பொருத்தம் மற்றும் ரஜ்ஜூப் பொருத்தம் ஆகிய முக்கியப் பொருத்தங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து, அதன் பிறகே திருமணம் செய்யவேண்டும்..." என்றார் அவர்.

- Vikatan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments