அமெரிக்காவை விட சுவிட்சர்லாந்து சிறந்த நாடு: ஏன் தெரியுமா?

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
1002Shares
1002Shares
lankasrimarket.com

சர்வதேச அளவில் அமெரிக்கா வல்லரசு நாடாக திகழ்ந்தாலும் பல்வேறு காரணங்களில் அமெரிக்காவை விட பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் சிறிய நாடான சுவிட்சர்லாந்து சிறந்த நாடாக திகழ்வதை மறுக்க முடியாது.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் உலகளவில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தை பிடித்தது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

தனிமனித சுதந்திரம், உரிமை, வாழ்க்கை முறை, பொருளாதார வளர்ச்சி, சுகாதாரம் உள்ளிட்ட பல விடயங்களில் சுவிட்சர்லாந்து அமெரிக்காவை விட சிறந்த நாடாக திகழ்கிறது.

உணவும், சுகாதாரமும்

மனித வாழ்க்கையின் முக்கிய அங்கமான சுகாதாரம் மீது சுவிஸ் மக்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர்.

அமெரிக்காவை ஒப்பிடுகையில், சுவிஸில் சுற்றுப்புறம் இயற்கையை சார்ந்து இருப்பதால் சுத்தமான காற்று கிடைப்பதுடன் சுவிஸ் மக்கள் சாப்பிடும் 90 சதவிகித பழங்களும், காய்கறிகளும் இயற்கை முறையில், அதாவது ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்யப்படுபவை ஆகும்.

சுவிஸ் நகரங்கள் சுத்தமாக பாதுகாப்பதுடன், எந்த சாலை மற்றும் தெருவில் பிச்சைக்காரர்களை பார்க்க முடியாது.

சுவிஸில் உள்ள அனைத்து நகரங்களிலும் தண்ணீர் குழாய் வசதிகள் உள்ளதால் மக்கள் சுத்தமான தண்ணீரை குடிக்க முடியும்.

நகரங்களும் அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், மக்கள் ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதற்காகவும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மக்கள் துணி துவைப்பது, கார்களை தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்துவது உள்ளிட்ட வேலைகளில் ஈடுப்படக்கூடாது என்பது சட்டமாகும்.

போக்குவரத்து வசதிகள்

சுவிட்சர்லாந்தில் ரயில் மற்றும் ட்ராம் வாகனங்களை மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். மேலும், வாகனங்கள் அனைத்தும் தாமதம் இல்லாமல் இயக்கப்படுவதால் மக்களின் நேரம் வெகுவாக சேமிக்கப்படுகிறது.

ஐரோப்பாவின் மத்தியில் சுவிட்சர்லாந்து அமைந்துள்ளதால், சுற்றியுள்ள நாடுகளுக்கு சில மணி நேரங்களில் பயணம் மேற்கொள்ளலாம்.

உதாரணத்திற்கு, ரயில் மூலம் சூரிச் நகரில் இருந்து ஜேர்மனிக்கு ஒரு மணி நேரத்தில் சென்றுவிடலாம். பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இரண்டு மணி நேரத்தில் சென்றுவிடலாம்.

இலவச கல்வி

அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களை ஒப்பிடுகையில், சுவிஸில் உள்ள உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழங்கள் தரமான கல்வியை வழங்குவதுடன் பெரும்பாலான இளங்கலை கல்வி இலவசமாகவே வழங்கப்படுகிறது.

பல்கலைக்கழகங்களில் கூட எந்த நாட்டை சேர்ந்த மாணவராக இருந்தாலும் கூட 500 பிராங்க் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு மற்றும் சலுகைகள்

அமெரிக்காவை ஒப்பிடுகையில் சுவிஸில் ஒருவருக்கு எளிதில் வேலை கிடைப்பதுடன் சிறந்த சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

பொதுவாக, சுவிஸில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே வேலை செய்கின்றனர். வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் யாரும் பணிக்கு செல்வதில்லை.

உதாரணத்திற்கு, திங்கள் முதல் வெள்ளி வரை சூரிச் நகரில் உள்ள மதுபான விடுதிகள் தவிர ஒட்டுமொத்த நகரமும் மாலை 7 மணிக்கு மூடப்படும்.

சனிக்கிழமைகளில் மாலை 4 மணி வரை நகரம் இயங்கும். அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் நகரம் முற்றிலுமாக மூடப்பட்ட நிலையில் காணப்படும்.

சுவிஸில் ஒருவர் ஹொட்டல் சர்வராக பணிபுரிந்தாலும், அவருக்கு ஒரு மணி நேரத்தில் 20 பிராங்க்(3,152 இலங்கை ரூபாய்) ஊதியமாக கிடைக்கும்.

இதுமட்டுமில்லாமல், சுவிஸில் அதிகமாக சம்பாதித்தாலும் அரசாங்கத்திற்கு குறைவாகவே மக்கள் வரி செலுத்துகின்றனர்.

மேலும், பணி காலத்தில் பெண் ஊழியர்கள் கர்ப்பமாக இருந்தால் அவர்களுக்கு 80 சதவிகித ஊதியத்துடன் 14 வாரங்கள் விடுமுறை அளிக்கப்படும். ஆனால், அமெரிக்காவில் ஊதியம் இல்லாமல் கர்ப்பிணி பெண் ஊழியர்களுக்கு 12 வாரங்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேலும், சுவிட்சர்லாந்து நாட்டில் மனைவி பிரசவம் செய்யும்போது கணவன்களுக்கும் ஊதியத்துடன் 2 வாரங்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.

கொலை, கொள்ளை குற்றங்கள் குறைவு

சுவிட்சர்லாந்து நாட்டு சட்டப்படி, 18 வயது பூர்த்தி அடைந்த ஒவ்வொரு வாலிபர்களும் ராணுவ பயிற்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாகும். இதன் மூலம், துப்பாக்கிகளை தொடாத ஆண்கள் சுவிஸில் இருக்க முடியாது.

மேலும், சுவிஸில் சொந்தமாக துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமை இருந்தாலும், அவற்றை கையாளுவதில் சுவிஸ் மக்கள் திறமையானவர்கள். இதனால் நாடு முழுவதும் கொலை, கொள்ளை சம்பவங்கள் மிகவும் அரிதாகவே நிகழ்கிறது.

இதுமட்டுமில்லாமல் குற்றங்களின் அளவீடு அமெரிக்காவை விட 81 முதல் 87 சதவிகிதம் வரை சுவிஸில் குறைவாக உள்ளதால், ஆண், பெண் என அனைவரும் நள்ளிரவில் கூட தனியாக வீதிகளில் நடந்து செல்லலாம்.

அரசு நிர்வாகமும், குடிமக்களும்

சுவிட்சர்லாந்து நாட்டில் அரசு ஒரு சட்டத்தை கொண்டு வந்து நேரடியாக நடைமுறைப்படுத்த முடியாது. அரசின் சட்டத்திற்கு 50,000 பேர் எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்திட்டால், குறிப்பிட்ட ஒரு நாளில் நாடு முழுவதும் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இந்த வாக்கெடுப்பில் பொதுமக்கள் ஆதரவு அளித்தால் மட்டுமே அச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

சட்டம் மட்டுமின்றி அரசு புதிய திட்டங்களை கொண்டு வரும்போது அதனை மக்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தால் மட்டுமே அத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இதுமட்டுமில்லாமல், ஒரு திட்டத்திற்கு எவ்வளவு பட்ஜெட் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதையும் அந்நாட்டு மக்கள் தான் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கின்றனர்.

சுவிஸ் மக்களின் ஆயுட்காலம்

சுவிஸ் மக்கள் ஆரோக்கியமாக சாப்பிடுவதுடன், சுகாதாரம் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளதால் அவர்களின் ஆயுட்காலம் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாட்டினர்களை விட அதிகமாக உள்ளது.

குறிப்பாக, சுவிஸ் மக்கள் மாலை 5 மணிக்கு பிறகு அதிகளவில் விளையாட்டு போட்டிகளில் ஈடுப்படுவதால் அவர்களின் உடல் கட்டுகோப்பாகவே உள்ளது.

அமெரிக்கர்களை ஒப்பிடுகையில் சுவிஸ் மக்கள் 2.83 ஆண்டுகள் கூடுதலாகவே வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்