கனடாவில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சவுதி அரேபியர் தலைமறைவு

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சவுதி அரேபியர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர் சவுதி தூதரக உதவியுடன் கனடாவிலிருந்து வெளியேறியிருக்கலாம் என்ற அச்சம் எற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய Mohammed Zuraibi al-Zoabi (28) என்னும் இளைஞர் Nova Scotiaவில் நீதிமன்றம் ஒன்றில் ஆஜராக வேண்டிய நிலையில், திடீரென மாயமாகியுள்ளதால் பொலிசார் அவரை தேடி வருகின்றனர்.

Cape Breton பல்கலைக்கழக மாணவரான al-Zoabi மீது, பாலியல் துஷ்பிரயோகம், தாக்குதல் நடத்தியது, ஆள் கடத்தல், மிரட்டல், அபாயகரமாக வாகனம் ஓட்டியது மற்றும் ஆயுதத்தால் தாக்கியது உட்பட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சவுதி தூதரகம் 37,500 டொலர்கள் பிணையத்தொகை செலுத்தியதையடுத்து, அவரது பாஸ்போர்ட்டை கனடா அரசிடம் ஒப்படைத்த பின்னர் al-Zoabi ஜாமீனில் விடப்பட்டார்.

சவுதி அவருக்கு பயணிப்பதற்கான ஆவணம் ஒன்றை வழங்கியிருந்தாலன்றி அவரால் பாஸ்போர்ட் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறியிருக்க முடியாது என்கிறார் புலம்பெயர்தல் வழக்கறிஞர் ஒருவர்.

தொலைபேசி பேட்டி ஒன்றில் al-Zoabiயிடம் பத்திரிகையாளர் ஒருவர் கனடாவில்தான் இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, இல்லை என்றுதான் நினைக்கிறேன், அதை உங்களிடம் கூற முடியாது என்று கூறியுள்ள அவர், தனக்கு நியாயம் கிடைக்காது என அஞ்சுவதால் மீண்டும் விசாரணைக்கு வர மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

உங்கள் மீது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு, தான் அதற்கு இணங்கப்போவதில்லை என்றும், இன ரீதியாகவும், வேற்று நாட்டவன் என்ற முறையிலும் எல்லோரும் தனக்கு எதிராக இருப்பதாகவும், ஆனால் தான் கனடாவுக்கு பெரும் தொகையை கல்விக்கட்டணமாக செலுத்தியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டும் ரீதியில் பேசியுள்ளார்.

இது குறித்து விசாரிக்க சவுதி தூதரகத்தை தொடர்பு கொண்டபோது சரியான பதில் எதுவும் கிடைக்கவில்லை.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்