யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் புத்தர் சிலை வைக்க முயற்சி: காலவரையறையின்றி மூடப்பட்டது வளாகம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் சிங்கள மாணவர்கள் புத்தர் சிலை வைப்பதற்கு முயற்சி மேற்கொண்ட போது வளாக நிர்வாகம் அதனை தடுத்தமையால் பதற்ற நிலை தோன்றியுள்ளது. இதனையடுத்து யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

வவுனியா வளாகத்தின் பம்பைமடுவில் அமைந்துள்ள வியாபார கற்கைகள் பீடத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் அங்கு புத்தர் சிலை ஒன்றினை வைப்பதற்காக அதற்கான கூட்டினை இன்று அமைத்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறாது மாணவர்கள் மேற்கொண்ட இம்முயற்சியை பல்கலைக்கழக நிர்வாகம் தடுத்து நிறுத்தியுள்ளது.

இதன்போது சிங்கள மாணவர்களால் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் புத்தர் சிலை வைப்பதற்கான கூட்டினை அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதுடன் சிங்கள மாணவர்கள்பார்க் வீதியில் அமைந்துள்ள வளாகத்தின் அலுவலகத்தினை முற்றையிட்டனர்.

இதனால் அங்கு பொலிசார் குவிக்கப்பட்டதுடன் வவுனியா வளாகமும் காலவரையரையின்றி மூடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேட்ட போது,

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தைச் சேர்ந்த சிங்கள மாணவர்கள் சிலர் அனுமதியின்றி பம்பைமடுவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் புத்தர் சிலை ஒன்றை வைப்பு செய்ய முயன்றனர்.

ஏற்கனவே நான்கு மதத்தவர்களும் வழிபாடு செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் சிலர் பல்கலைக்கழக அனுமதி பெறாது ஒரு இடத்தில் புத்தர் சிலை வைக்க எடுத்த முயற்சி மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை தோற்றுவிக்கக் கூடியதாக இருந்தது.

இதனால் அதனை தடுத்தோம். அதன் போது மாணவர்களால் எமக்கு அச்சுறுத்தல் விடப்பட்டது. இருப்பினும் தற்போது சட்ட முரணாக மாணவர்கள் மேற்கொண்ட முயற்சி தடுக்கப்பட்டதுடன் ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களையும் வெளியேறுமாறு பணித்துள்ளோம் என தெரிவித்தனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்