சாதனை நாயகன் டிவில்லியர்ஸ் கடந்து வந்த பாதை

Report Print Kabilan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் திடீர் ஓய்வு அறிவித்துள்ள நிலையில், அவர் கடந்து வந்த பாதை குறித்து இங்கு காண்போம்.

ஏபி டிவில்லியர்ஸ் 1984ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் திகதி பிறந்தார். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இவரின் முழுப்பெயர் ஆபிரகாம் பெஞ்சமின் டிவில்லியர்ஸ்.

டெஸ்ட் கிரிக்கெட்

கடந்த 2004ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், டிவில்லியர்ஸ் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். அந்த போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் முறையே 28 மற்றும் 14 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.

அதன் பிறகு விளையாடிய 4 டெஸ்ட் போட்டிகளில் பெரியதாக ஓட்டங்கள் எதையும் அவர் எடுக்கவில்லை. ஆனால், தனது 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஆடினார். அந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 92 ஓட்டங்கள் குவித்து சதத்தை தவறவிட்டார்.

எனினும், அடுத்த இன்னிங்சிலேயே சதமடித்தார். அதன் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 178 மற்றும் 114 என இரண்டு சதங்கள் விளாசினார்.

இந்நிலையில், கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக தனது முதல் இரட்டை சதத்தை டிவில்லியர்ஸ் பதிவு செய்தார். இந்த டெஸ்டில் அவர் 217 ஓட்டங்கள் குவித்து அணியை மிகப்பெரிய வெற்றி பெற வைத்தார்.

அதே ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் 414 என்ற கடின இலக்கை விரட்டி பிடிக்க டிவில்லியர்ஸின் 106 பெரிதும் உதவியது.

இறுதிவரை களத்தில் நின்று அந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வெற்றி பெற வைத்தார். இந்த வெற்றியின் மூலம், டெஸ்டில் 2வது மிகப்பெரிய இலக்கினை வென்ற அணி என்னும் சாதனையை தென் ஆப்பிரிக்கா பெற்றது.

டெஸ்ட் அரங்கில் 217 (இந்தியாவுக்கு எதிராக), 278 (பாகிஸ்தானுக்கு எதிராக) என இரண்டு முறை இரட்டை சதம் அடித்துள்ளார்.

இதுவரை 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டிவில்லியர்ஸ், 8765 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 22 சதங்கள், 46 அரைசதங்கள் அடங்கும்.

AFP

ஒருநாள் கிரிக்கெட்

கடந்த 2005ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியில் டிவில்லியர்ஸ் களமிறங்கினார். அந்த போட்டியில் 20 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த டிவில்லியர்ஸ், தனது 17வது போட்டியில் முதல் அரைசதம் அடித்தார்.

அதன் பின்னர், 2007ஆம் ஆண்டில் நடந்த உலகக் கிண்ண தொடரில் தான் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அந்தப் போட்டியில் 146 ஓட்டங்கள் விளாசினார்.

இதனைத் தொடர்ந்து, 5 ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சதமடித்து அசத்தினார். விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்த டிவில்லியர்ஸ், கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடருக்கு பின்னர், தென் ஆப்பிரிக்க ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

அதன் பின்னர், விக்கெட் கீப்பிங்கில் இருந்து விலகி துடுப்பாட்ட வீரராக தொடர்ந்தார். கடந்த 2015ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 66 பந்துகளில் 162 ஓட்டங்கள் எடுத்து ருத்ர தாண்டவம் ஆடினார் டிவில்லியர்ஸ்.

டிவில்லியர்ஸின் 25வது ஒருநாள் சதம், 2017ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக அமைந்தது. அந்த போட்டியில் 104 பந்துகளில் 176 ஓட்டங்கள் குவித்தார். இதுவே ஒருநாள் போட்டியில் அவரது அதிகபட்ச Score ஆகும்.

இதுவரை 228 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள டிவில்லியர்ஸ், 9577 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 25 சதங்கள், 53 அரைசதங்கள் அடங்கும்.

சாதனைகள்

தனது அதிரடியான துடுப்பாட்டத்தினால் டிவில்லியர்ஸ் பல சாதனைகளை படைத்துள்ளார். அதில் முக்கியமானவை:

  • சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிவேக அரைசதம் (16 பந்துகளில்) - மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக (2015)
  • சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிவேக சதம் (31 பந்துகளில்) - மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக (2015)
  • சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிவேக 150 ஓட்டங்கள் (64 பந்துகளில்) - மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக (2015)
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணி வீரரின் 2வது அதிகபட்ச Score (278*) - பாகிஸ்தானுக்கு எதிராக (2010)
  • டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் (2013)

சறுக்கல்கள்

அதிரடி துடுப்பாட்ட வீரராக திகழ்ந்தாலும், டிவில்லியர்ஸ் சில சறுக்கல்களையும் சந்தித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டில் உலகக் கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் தென் ஆப்பிரிக்க அணி சிறப்பாக விளையாடி வந்தது. ஆனால், துரதிஷ்டவசமாக நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது. இதனால் மனமுடைந்த தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் (டிவில்லியர்ஸ் உட்பட) மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதனர்.

தொடர்ச்சியாக ஏற்பட்ட காயங்களின் காரணமாக, 2015-16 சீசனில் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் தலைவர் பொறுப்பு டிவில்லியர்ஸுக்கு வந்தும் அதில் அவரால் நீடிக்க முடியவில்லை.

அதனைத் தொடர்ந்து, அதே ஆண்டில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முத்தரப்பு தொடரின்போது டெஸ்ட் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார்.

2017ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்க அணி, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து தகுதிச் சுற்று ஆட்டங்களுடன் வெளியேறியது பெரிய சறுக்கலாக அமைந்தது.

Quinn Rooney/Getty Images

ஓய்வு அறிவிப்பு

2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடருக்கு இன்னும் 12 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக டிவில்லியர்ஸ் அறிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘நான் சோர்வாக உள்ளேன். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுகிறேன். 114 டெஸ்ட், 228 ஒருநாள், 78 டி20 ஆட்டங்களில் பங்கேற்ற பிறகு மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க இதுவே சரியான தருணம். இது மிக கடினமான முடிவாகும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers