ஒரு தமிழர் எத்தனை பேரை வாழ வைக்கிறார் தெரியுமா? உலக கோடீஸ்வரரின் சாதனை கதை

Report Print Raju Raju in தொழிலதிபர்

போர்ப்ஸ் இதழ் ஆண்டுதோறும் வெளியிடும் உலக பணக்காரர்கள் வரிசையில் தவறாமல் இடம்பெறும் ஒரு தமிழர் பெயர் ஷிவ் நாடார்.

இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் ஷிவ் நாடாரின் பெயர் 82வது இடத்தில் உள்ளது.

ஒரு தமிழர் இவ்வளவு பணம் வைத்திருக்கிறார் என்பதில் அவரின் பெருமை இல்லை. அந்தப் பணத்தைக் கொண்டு அவர் செய்யும் நல்ல விடயங்களில் தான் இருக்கிறது. ஆம் தூத்துக்குடியில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து தமிழ்வழி கல்வி பெற்று மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், கோவை PSG கல்லூரியிலும் பட்டப்படிப்பை முடித்த ஷிவ் நாடார் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

கல்லூரி படிப்புக்கு பின்னர் கடந்த 1968-ல் ஷிவ் நாடார் வேலை தேடி புது டெல்லிக்கு சென்றார். அங்குள்ள டி.சி.எம் (DCM) லிமிடெட் என்ற நிறுவனத்தில் பொறியாளர் வேலை கிடைத்தது.

ஒரு பக்கம் வேலையில் இருந்தாலும் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்பதே அவரின் எண்ணமாக இருந்தது.

ஒரு வருட வேலை பார்த்த பிறகு ஐ.பி.எம் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இணைந்தார்.

அங்கு நன்றாக வேலையை கற்றுக்கொண்ட ஷிவ் நாடார் 1970-ல் HCL நிறுவனத்தை சிறியளவில் தொடங்கினார்.

தொழில்நுட்பங்கள் குறித்த விடயங்களை தொடர்ந்து படித்து அதில் புலமை பெற்று வந்த நிலையில் 1982-ல் HCL நிறுவனத்தின் முதல் கணினியை ஷிவ் நாடார் வெளியிட்டார்.

தனது கடும் உழைப்பாலும், திறமையாலும் HCL நிறுவனத்தை நம்பர் 1 நிறுவனமாக கொண்டு வந்தார்.

இந்தியா மட்டுமின்றி HCL நிறுவனத்தின் படைப்புகள் இன்று உலகம் முழுவதும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளன.

இப்படி, HCL நிறுவனம் லாபம் தரும் ஒரு பெரும் நிறுவனமாக உயர்ந்து வந்த நிலையில் தன் அம்மாவிடம், இந்த பணத்தையெல்லாம் வைத்து என்ன செய்யட்டும் என்று கேட்ட அவரிடம் இல்லாதவர்க்கு நல்லது செய் என்ற கூறிய தனது அம்மாவிடம் இருந்து தான் தன் ஈகைப் பண்பை வளர்த்துக்கொண்டேன் என்று மெய்சிலிர்க்கிறார் ஷிவ் நாடார்.

2016க்குப் பின் மட்டுமே 650 கோடியை ஏழை மாணவர்களின் கல்விக்காக செல்வழித்துள்ளார் என்றால் யோசித்துக்கொள்ளுங்கள்.

தங்கள் நிறுவனத்தின் பெயரைப் பதித்து அதையும் விளம்பரமாக்கும் நிறுவனங்களுக்கு மத்தியில், கல்வி தான் ஒரு மனிதனுக்கு உண்மையான வளர்ச்சியாக இருக்கும் என்று கூறி தமிழகத்தில் SSN பொறியியல் கல்லூரியையும் உத்திர பிரதேசத்தில் வித்யாஞான் பள்ளியையும் தொடங்கி லாபநோக்கமில்லாது, எளிய மாணவர்களின் வாழ்க்கையை மாற்றி வருகிறார்.

ஒவ்வொரு கல்வியாண்டிலும் 200க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் SSN கல்லூரியில் இலவசமாகப் பயின்று பெருநிறுவனங்களில் பணிக்குச் செல்கின்றனர்.

தற்போது ஷிவ் நாடாரின் நிகர சொத்து மதிப்பு $14.5 பில்லியன் என போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

அதே போல அவரின் HCL நிறுவனம் $8.2 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்